Tue. Mar 19th, 2024

நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை (எண் 3822/23.03.2023) எழுப்பி இருந்தார். அதற்கு மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார். “ஐந்தாண்டுகளில் எவ்வளவு?”கடந்த ஐந்து நிதியாண்டுகளில் சிறுபான்மை மக்கள் நலனுக்காக எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எவ்வளவு உண்மையில் செலவிடப்பட்டது? ஒதுக்கீடுகள் குறித்து நிதி அமைச்சகத்திடம் சிறுபான்மை நல அமைச்சகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளனவா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அமைச்சர் பதில்”

2017-18 இல் துவங்கி 2022 – 23 நிதியாண்டு வரையிலான பட்ஜெட் ஒதுக்கீடு, திருத்தப்பட்ட மதிப்பீடு, உண்மைச் செலவினம் ஆகியன பற்றிய விவரங்களை அமைச்சர் தந்துள்ளார்.2022 – 23 இல் சிறுபான்மை நலனுக்கான பட்ஜெட் தொகை 5020 கோடிகள். திருத்தப்பட்ட மதிப்பீடு 2612 கோடி, உண்மைச் செலவினம் மார்ச் 17, 2023 வரை 712 கோடிகள் மட்டுமே ஆகும், இது போல மற்ற நிதியாண்டுகளுக்கும் அமைச்சர் விவரங்களை தந்துள்ளார், சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கான 6 திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மைநல அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு போதுமான அளவில் இருக்கிறது என்றும், நலத் திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன் கருத்து

அமைச்சர் தந்துள்ள விவரங்கள் அதிர்ச்சியை தருகின்றன. 2018 -19 இல் துவங்கி 2022-23 வரை எல்லா நிதியாண்டிலும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட உண்மைச் செலவினம் குறைவாகவே உள்ளது. 2018 -19 = 82%, 2019 – 20 = 95 %, 2020 21 = 79%, 2021 – 22 = 90% என்பதாகவே உள்ளது. 2022 – 23 இல் பட்ஜெட் ஒதுக்கீடை விட உண்மைச் செலவினம் 14 % தான் மார்ச் 17, 2023 வரை ஆகியுள்ளது பேரதிர்ச்சி தரும் விவரம் ஆகும். மேலும் 13 நாட்களே உள்ள நிலையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை நெருங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை.2020 -21 க்கு பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடே பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் வெகுவாக குறைந்து விட்டது. 2022 – 23 இல் திருத்தப்பட்ட மதிப்பீடே 52 சதவீதம் ஆகவே உள்ளது. பட்ஜெட் என்பதே சிறுபான்மையினரை பொருத்த வரை கேலிக் கூத்தானாதாக இருக்கிறது என்று சு. வெங்கடேசன் எம். பி கருத்து, தெரிவித்துள்ளார்.

“எல்லாவற்றிலும் வெட்டு”

2023 – 24 பட்ஜெட் ஒதுக்கீடே 38 சதவீதம் சரிந்துள்ளது. கல்வி உதவித் தொகை, திறன் மேம்பாடு ஆகியன எல்லாம் பெரும் வெட்டை சந்தித்துள்ளன.ஆனால் சிறுபான்மை நல அமைச்சர் ஒதுக்கீடுகள் போதுமானது என்கிறார். நிதி அமைச்சகத்திடம் எந்த நிதி ஒதுக்கீடு கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. என்கிறார். ஆனால் திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகிறதாம். சிறுபான்மை நல அமைச்சகம் என்ற பெயருக்கும் அமைச்சரின் அணுகுமுறைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? என்று சு. வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார்.

Visits: 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *