Fri. Apr 26th, 2024

சென்னை : மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, முதன்முதலில் 2000-ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம்.

மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதற்கான அனுமதியை வழங்கத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம்.

பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை வைத்து வாதாடினோம்.

மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது.

மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி இது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது.

மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது.”

Visits: 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *