Sat. May 11th, 2024

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை “பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும் , சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபி அவர்களை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது . இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது . அத்துடன் , அரபு நாடுகளில் வேலை செய்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது . இதற்கு காரணமான பாஜக நிர்வாகிகளை இந்திய அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் .

பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா என்பவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசினார் . இன்னொரு நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலைதளத்தில் நபி பெருமானை இழிவுபடுத்திப் பதிவு செய்தார் . இதனால் அரபு நாடுகள் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது . சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது . கடைகளிலிருந்து இந்தியப் பொருட்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன . கத்தார் அரசு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளது . குவைத் , கத்தார் , ஈரான் , ஆகிய நாடுகள் இந்திய தூதரை நேரில் அழைத்துத் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன . பாகிஸ்தான் பிரதமர் , முன்னாள் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் . இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பும் , உலக அரங்கில் சகிப்புத்தன்மை அற்ற நாடு என்ற அவப்பெயரும் , தலைக்குனிவும் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது .

அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் . குறிப்பாக பீகார் , உத்தரபிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் அங்கு வேலை செய்கின்றனர் . இப்போது அவர்களுடைய வேலைக்கெல்லாம் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது . இவை எல்லாவற்றுக்கும் பாஜக நிர்வாகிகளின் வெறுப்புப் பேச்சே காரணம் .

அரபு நாடுகளில் எழுந்த எதிர்ப்பையொட்டி அவர்கள் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைப்பதாக பாஜக அறிவிப்பு செய்து இருக்கிறது . ஆனால் நூபுர் சர்மாவோ பிரதமர் , உள்துறை அமைச்சர் , பாஜக தலைவர் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்கள் எல்லோரும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் . அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகச் சொன்னது அரபு நாடுகளை ஏமாற்றுவதற்காகச் செய்த தந்திரம்தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது .

இது எந்த விதத்திலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பையோ , தலைகுனிவையோ நீக்குவதாக இல்லை . உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி , மதரீதியாகப் பதற்றத்தை உருவாக்கி மிகப் பெரிய வன்முறை கலவரத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ள பாஜக நிர்வாகிகள் இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் .

இசுலாமியர்கள் , கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகவும் , எஸ்சி , எஸ்டி , ஓபிசி மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வெறுப்பைப் பரப்பிவரும் சனாதனப் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம் .”

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *