Wed. May 15th, 2024

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் திட்டத்துடன் அங்கு 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க, தமிழ்நாடு அரசிடம், ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை வட்டத்திலும் இந்த சோதனை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

அப்பகுதிகளில், 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது. நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ, அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும்.

இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், இராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கண்டனத்திற்குரியது.

எனவே, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும். பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.”

Views: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *