Wed. May 29th, 2024

அரசமைப்புச் சட்டத் திருத்த (பழங்குடியினர்) மசோதா குறித்த விவாதத்தில் நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை:

“மாண்புமிகு அவைத் தலைவருக்கு வணக்கம். இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நெடுங்காலத்து கோரிக்கை நிறைவேறி இருக்கிறது. இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாக நான் பெருமைப்படுகிறேன்.

சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் இது குறித்து முதன் முதலாக பேசிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. சில ஆயிரம் பேர்களை மட்டுமே கொண்ட ஒரு சமூகமாக இருந்தாலும் கூட அவர்கள் அரசின் எந்த நலத்திட்டங்களையும் நுகர முடியாதவர்களாக கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றை பெறமுடியாதவர்களாக வஞ்சிக்கப்பட்டு வந்தார்கள். அதற்கு காரணம் அவர்கள் இத்தனை காலமும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது தான். இப்போதுதான் அவர்கள் பழங்குடியினம் என்கிற பட்டியலில் இடம்பெறப் போகிறார்கள். அந்த வகையிலே பரிந்துரைத்த தமிழக அரசுக்கு குறிப்பாக தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தில் 17 சமூகத்தைச் சார்ந்த பிரிவினர் பழங்குடியினத்துக்கான பண்புகளைக் கொண்ட சமூக பிரிவினர்களாக இருக்கிறார்கள். அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு ஒரு வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பைரா, பக்கூடா, சண்டி, பெல்லாரா, தொம்பன், கொடகாளி, கொட்டா. கோசாங்கி. கோலியா, ஜக்காலி, ஜம்புவுலு, கூசா கொறவன், நாயாடி, வேடன், வேட்டுவன் என்கிற இந்த சமூகப் பிரிவினர் Sccheduled Caste பட்டியலில் இருந்தால் எந்த பயனையும் அவர்களால் நுகர முடியாது. ஆகவே, பழங்குடியினர் பட்டியலில் இவர்கள் இணைக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இது போல எந்தெந்த மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியல் இனத்தில் இடம்பெற்றிருக்கிறார்களோ அவர்களை எல்லாம் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய வழிகாட்டுதலை தர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவில் 12.6 சதவீத மக்கள் புலம் பெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்தவர்கள் (interstate Migrants) ஏறத்தாழ 15 கோடி மக்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலின மக்கள் என்று சொல்லலாம். இவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து வாழ்வதினாலேயே சொந்த மாநிலத்தில் தான் சாதி

சான்றிதழ் காட்டி கல்வியோ வேலை வாய்ப்பு பெற முடியும் என்கிற நிலையில் அவதிப்பட்டு வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக இந்த பாதிப்புக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல scheduled Caste, scheduled Tribes & OBC ஆகிய Reserved Categories பாதிக்கப்படுகிறார்கள். இது EWS பிரிவினருக்கு பொருந்தாது. ஆனால் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினர் தமிழ்நாட்டில் இருந்து சண்டிகாரில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் ஏன் டெல்லியிலேயே ஏராளமானவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் இவர்களெல்லாம் அவர்கள் சொந்த மாநிலத்தில் இருந்தால் தான் சாதி சான்றிதழ் பெற்று கல்வி வேலைவாய்ப்பு என்கிற பயனை நுகர முடியும் என்கிற நிலை இருக்கிறது. இதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கல்வி வேலைவாய்ப்பில் அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அகில இந்திய அளவிலே பட்டியலின மக்கள் தொகை என்பது 17 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதேபோல பழங்குடியினர் மக்கள் தொகை என்பது 9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆக அந்த மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பழங்குடியின மக்கள் வனப்பொருட்களுக்கு முன்னுரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். வனம் இந்திய ஒன்றிய அரசால் பாதுகாக்கப்படுகிறது என்கிற பெயரால் பழங்குடியின மக்களை அங்கிருந்து வெளியேற்றி அதை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கக் கூடிய நிலை இருக்கிறது. இது மிகப்பெரிய அநீதி ஆகும். ஆகவே. அந்தந்த பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் உற்பத்தி செய்யக்கூடிய வனப் பொருட்களுக்கு உற்பத்தி பொருட்களுக்கு முற்றுரிமை வழங்க வேண்டும். அதில் கார்ப்பரேட்டுகளின் தலையீடு கூடாது. அதற்கேற்ப அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

PreMatric Scholarship என்பது மிக முக்கியமான ஒரு பிரச்சனை. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக ஒரு தீர்வை காண வேண்டும். பள்ளி மாணவர்களின் வயிற்றில் அடித்த இந்த செயல்பாட்டை நான் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். பல ஆயிரம் கோடிகளை பல லட்சம் கோடிகளை நாம் விரையம் செய்கிறோம். கடனுதவி என்கிற பெயரால் யார் யாரோ கடனை வாங்கிக் கொண்டு திருப்பி செலுத்தாமல் அதை தள்ளுபடி செய்யும் நிலையை பார்க்கிறோம். ஆனால், ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பயன்படக்கூடிய இந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தியது மிகப்பெரிய அநீதி என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, மீண்டும் அவர்களுக்கு அந்த உதவித் தொகையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்! நன்றி வணக்கம்.”

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *