Fri. Mar 29th, 2024

முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் , ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது . முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது .

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு , கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில் , இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து , அதனை ரத்து செய்தது . மேலும் , இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது , அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது .

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை . மேலும் , கேரளா , கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் , ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு , அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன .

இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து , மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று ( 9-6-2022 ) நடைபெற்றது .

இக்கூட்டத்தில் ,

1.ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும் ;

2.இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும் ;

3.இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து , அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் ,

இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு . கே . சந்துரு அவர்கள் தலைமையில் , ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் திரு . சங்கரராமன் , ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் திருமதி லட்சுமி விஜயகுமார் , காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு . வினித் தேவ் வான்கடே , இ.கா.ப ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது .

மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி , அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் . இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும் .”

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *