Tue. Apr 30th, 2024

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி “தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் “தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளினை” 18-12-2022 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நல்ல தருணத்தில் தமிழ்நாட்டில் வாழும் மத மற்றும் மொழிச்சிறுபான்மை மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்குச் சிறுபான்மையினர் ஆற்றும் பங்களிப்பு மகத்தானது. தமிழ்மொழிக்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும், தமிழர்களுக்கும், திராவிடப் பண்பாட்டுக்கும் அவர்கள் ஆற்றியுள்ள தொண்டுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

மதம், சாதி ஆகிய எல்லைகளைக் கடந்து தமிழகத்தில் வாழும் அனைவரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ்ச் சமூகமாக எழுந்து நிற்கவேண்டும் என்பதே நமது “திராவிட மாடல்” ஆட்சியின் உயரிய நோக்கம். மதம், சாதி, மொழி என்ற அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல் அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற்று. மனித மாண்புகளுடன் சமூகநீதி பெற்ற சமூகமாக வாழ எனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படாமல் தனிமனித உரிமைகளுக்கான பாதுகாப்போடு வாழ்கின்ற முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பது நமக்கிருக்கும் சிறப்பான பெருமை ஆகும்.

இந்த நல்ல நாளில் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் எனது அன்பையும் நல்வாழ்த்துகளையும் தெரிவியுங்கள். அவர்களது நல்ல முயற்சிகள் அனைத்துக்கும் எனது அரசு துணைநிற்கும்.

தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்ற நானும், நமது அரசும் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து ஒத்துழைப்பினையும் நல்கவேண்டும் என வேண்டுகிறேன்.

நமது ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் என் மீதும் சிறுபான்மைச் சமூகங்களின் மக்கள் கொண்டுள்ள அன்புக்கும். பாசத்திற்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். விழா சிறக்க எனது நல்வாழ்த்துகள்.”

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *