Thu. Jun 20th, 2024

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை “இந்த வெள்ளை அறிக்கை என்ன சொல்கிறது? பில்லியனர்களுடைய வளர்ச்சியைப் பற்றி இங்கே நான் சொல்ல வேண்டும், 2014வது ஆண்டில் இந்தியாவில் 70 பில்லியனர்கள் இருந்தார்கள், இன்றைக்கு 170 பில்லியனர்கள் இருக்கிறார்கள்.

தனிநபர் சராசரி வருமானம் உலகத்தில் 142 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மனித வள குறியீட்டில் 132 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மகிழ்ச்சிக் குறியீட்டில் 136-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்ப்பரேட்டுகள் மகிழ்ச்சியில் திளைக்கிற ஒரு நாட்டில் மக்களின் மகிழ்ச்சி கடலினுள் தான் மூச்சு மூழ்க உள்ளே கிடக்கும். எனவேதான் இந்தியா உலகின் மகிழ்ச்சிக் குறியீட்டில் 136 வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச உணவுக்கொள்கைக் கழகத்தினுடைய பட்டினிக் குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது.

இந்தப் புள்ளி விவரத்தை எல்லாம் எதிர்க்கட்சிகள் சொன்னால் இந்தப் புள்ளி விவரத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று அமைச்சர் சொல்கிறார். நீங்களே பரிட்சை எழுதிக் கொள்வீர்கள், நீங்களே மதிப்பிட்டுக் கொள்வீர்கள், நீங்களே அதற்கு மதிப்பெண் இட்டுக் கொள்வீர்கள் கேட்டால் மதிப்பெண் விஷயத்தில் தவறு இழைத்தால் பத்தாண்டு கால சிறைத்தண்டனை என்று புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறீர்கள்.

பணவீக்கத்தைப் பற்றி இங்கே பேசி உள்ளீர்கள்… நிறைய வரைபடங்கள் வெள்ளை அறிக்கையிலே இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வரைபடத்தை நீங்கள் ஏன் தவறவிட்டீர்கள்? சமையல் கியாஸ் விலை உயர்வு வரைபடத்தை நீங்கள் வெளியிடத் தயாரா?

10 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரிகள் 3.5 மடங்கு உயர்ந்திருக்கிறது, டீசல் மீதான வரி 9.5 மடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? யமுனையின் கரையிலே சாந்தி வனத்திலே உறங்கிக் கொண்டிருக்கிற ஜவஹர்லால் நேரு தான் இதற்கும் காரணமா?

நீங்கள் யோசித்துப் பாருங்கள், கார்ப்பரேட்டுகளின் வரி 2016 ஆவது ஆண்டு 33 சதவீதம் இருந்தது. உங்கள் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் வரி 22% மட்டுமே. 11% கார்ப்பரேட்டுகளுக்கு குறைத்து இருக்கிறீர்கள். 1% கார்ப்பரேட் வரி 50,000 கோடி எனில் 11% என்றால் எத்தனை ஆயிரம் கோடி என்று நிதி அமைச்சர் இந்த அவையிலே கணக்கு முன் வைப்பாரா?

மக்களுக்குக் கொடுத்தால் அது சலுகை, மக்களுக்கு கொடுத்தால் அது இலவசம். கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தால் அது ஊக்கத்தொகை. உங்களது அகராதியை இந்த நாடு மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களது வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. “

Views: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *