Mon. Dec 4th, 2023

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம் பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னையிலிருந்து மதுரை செல்ல பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்க நேற்று இரவு(16-11-2023) எழும்பூர் இரயில் நிலையம் வந்தேன். வழக்கமாக பாண்டியன் விரைவு வண்டி பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக உள்ளே நுழைந்ததும் எதிர்படும் நடைமேடையான நான்காவது நடைமேடையில் தான் நிறுத்தப்படும். எழும்பூர் இரயில் நிலையத்தை பொறுத்தவரை அது தான் முதல் நடைமேடை

நேற்று வழக்கத்துக்கு மாறாக பாண்டியன் விரைவு வண்டி ஐந்தாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டிருந்தது. சுமார் ஆயிரம் பயணிகள் இங்குமங்குமாக அலைக்கழிந்து படிக்சுட்டில் ஏறி அடுத்த நடைமேடையை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். வயதானவர்கள், கைக்குழந்தையோடு வரும் தாய்மார்கள் எல்லாம் பரிதவிப்போடு விரைந்து கொண்டிருந்தார்கள்.

நான் உள்ளே நுழைந்ததும் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் “பாண்டியன் அடுத்த நடைமேடையில் நிற்கிறது சார்” என்றார்.

நான்காவது நடைமேடையிலும் ஒரு இரயில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் யாருமே ஏறாத இரயிலாக அது இருந்தது. “இந்த வண்டி எங்கே செல்கிறது? இதை ஏன் நான்காவது நடைமேடையில் நிறுத்தியுள்ளீர்கள்?” எனக்கேட்டேன்.

“இரயில்வே போர்டு உறுப்பினர் திரு.ரூப் நாராயண் சங்கர் வந்துள்ளார். நாளை இராமேஸ்வரத்துக்கு ஆய்வுக்கு செல்கிறார். அவருக்காக இந்த வண்டி நிற்கிறது” என்றார்.

இரயில் நிலைய கட்டுமானப்பணி, தண்டவாள பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு ரெயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், ஒரு மனிதருக்காக பத்து பெட்டிகள் கொண்ட முழு இரயில், அந்த ஒரு நபர் படிக்கட்டுகளில் மேவேறி இறங்கி அடுத்த நடைமேடைக்கு செல்லும் சிரமத்தை கொடுக்காமல் வசதி செய்துதரப்பட வேண்டும் என்பதற்காக சுமார் 1000 பயணிகள் பயணிக்கும் பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்களை அலைகழித்த கொடுமை.

அதுவும் அந்த இரயில் இரவு 10.40 க்குத்தான் புறப்பட உள்ளது. ஆனால் பாண்டியன் விரைவு வண்டியோ இரவு 9.40 க்கு புறப்படுகிறது. ஒரு மணிநேரங்கழித்து புறப்படப்போகும் ஒரு மனிதருக்காக இவ்வளவு ஏற்பாடு.

பிரிட்டீஷ் காலத்திலிருந்த நிர்வாக அடிமைத்தன மதிப்பீடுகளும், பழக்கங்களும் இன்னும் அதிகம் நடைமுறையில் இருக்கும் துறையாக இரயில்வே துறை இருக்கிறது. எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை. காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை தங்களின் வசதிக்காக இன்றளவு கடைபிடிக்கிற அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

ஒரு அதிகாரியின் நலன் சுருதி ஆயிரம் பயணிகளை அலைகழித்தற்காக தெற்கு இரயில்வே பொதுமேலாளர் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்.”

Hits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *