Thu. May 30th, 2024

திக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய மாநிலங்களுக்கு இம்மாத இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைய இருக்கின்றன.
சில மாநிலங்களில் தேர்தல் தொடங்கி ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்டமும் தொடங்கும் நிலை உள்ளது.

அய்ந்து மாநிலத் தேர்தல்களிலும்
காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புகள்!

தேர்தல் முடிவுகள் – டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது!
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து அம்மாநிலங்களில் நடைபெற்று வருகின்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்!

‘‘கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்தே தீரும்‘’ என்பதுபோல, முடிவுகள் (2023) டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் நிலையில், அது உண்மையா? அல்லது வாக்குப் பெறுவதற்கான பேச்சா என்பது அன்று நாட்டிற்குத் தெரிந்துவிடும் என்பது உறுதி!
அய்ந்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புகள் உண்டு என்று இளந்தலைவர் ராகுல் அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்!

நேரில் போகாமல் காணொலிமூலமே பிரச்சாரம்!

கருநாடகத்தைப்போல, இந்த மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்கிறார் ராகுல்!

பா.ஜ.க.வுக்கு வாக்குகளைச் சேர்த்துத் தருவதில் மோடிக்கு நிகரானவர் எவருமில்லை என்பது, கடந்த சில காலம் முன்பு நடந்த (கருநாடகத் தேர்தல் உள்பட) தேர்தல்கள்வரை, அரசியல் வட்டாரங்களில் நிலவிய கருத்து, இப்போது தலைகீழாக வருகிறது! ஆர்.எஸ்.எஸ். அறிந்த ஒன்று.
மிசோராம் மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி நேரில் போகாமல், வெறும் காணொலி செய்தி மூலமே பிரச்சாரம் செய்தார்!
காரணம் வெளிப்படையாகவே அரசியல் விவரம் அறிந்தவர்களுக்குப் புரியும்.

பா.ஜ.க.வை தோல்வி பயம் உலுக்குகிறது!

‘‘தேர்தல் அறிவிப்பு இலவசங்களால் நாடே குட்டிச்சுவராகி விட்டது’’ என்று கூறிய பா.ஜ.க., அதன் தலைவர் – இப்போது மற்ற அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவித்து வருகிறார். இதுவரை கவலைப்படாத சமூகநீதிப்பற்றி உரக்கப் பேசுகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர், ஒடுக்கப்பட்டவர்கள் இட ஒதுக்கீடுப்பற்றிப் பேசாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, EWS என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அய்ந்தே நாட்களில் அரசமைப்புச் சட்டத் திருத்தமாகக் கொண்டு வந்து, வித்தை காட்டியது; இப்போது சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர், பெண்கள் இட ஒதுக்கீடுபற்றி புதிய மோகம் பிடித்து, ஓட்டு வேட்டை ஆடும் நிலை ஏற்படுகிறது என்றால், தோல்வி பயம் உலுக்குகிறது பா.ஜ.க.வை என்பதுதானே உண்மை!

அரசியல் நோக்கர்கள்,
பொதுநிலையாளர்களின் கணிப்பு!

எல்லாவற்றையும்விட வட மாநிலங்களும்கூட தங்களை விட்டுப் போய்விடும் என்பதால்தான் கடைசியாக இராமன் கோவிலைக் காட்டியாவது பக்தி மயக்க பிஸ்கெட்டைத் தேடும் நிலை உள்ளது!
எதிர்க்கட்சியினருக்கு எதிராக அமலாக்கத் துறையின் முற்றுகை, வழக்குகள் என்ற அடக்குமுறை இப்படி பலவகை அஸ்திரங்களை இப்போது கையாளும் பரிதாப நிலை!

வடபுல மக்கள் புரிந்துகொண்டு வருகிறார்கள் என்பதை இந்த 5 மாநிலத் தேர்தல்கள் நிச்சயம் உலகுக்கு உணர்த்தும் என்றுதான் அரசியல் நோக்கர்கள், பொது நிலையாளர்கள் கணிக்கிறார்கள்.

மக்கள் விழிப்படையவேண்டும் என்பதே
நமது எதிர்பார்ப்பு!

பி.ஜே.பி.,க்குத் தென்னாடு அதன் கதவைச் சாத்திவிட்டது; வடபுலமும் அதைப் பின்பற்ற ஆயத்தமாகுமா என்ற கேள்விக்கு டிசம்பர் 3 ஆம் தேதி விடை கிடைக்கும் அரசியல் களத்தில்.

அதனால்தான் தேர்தல் விதிக்கு முரணாக சில திடீர் அறிவிப்புகள்கூட இலவசங்களாக வந்துள்ளன – கடைசிநேர ஊசிகள்போல்! பா.ஜ.க.வினைப் புரிந்துகொள்ளலாம்.
மக்கள் விழிப்படைவார்கள் – விழிப்படையவேண்டும் என்று நம்புகிறோம்!”

Views: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *