Mon. Dec 4th, 2023

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டாக்டர்.பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை கிராமம் கீலூர் பகுதி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் மணி. இவர் ஆடுகள் மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று மாலை ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த வேலையில் அங்குள்ள கோவில் அருகில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.இந்த கொலை சம்பவம் எதற்காக நடந்தது என்ற காரணம் இதுவரை பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் தெரியவில்லை இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இப்படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது.

தென்தமிழகத்தில் அடுத்தடுத்து எவ்வித காரணமின்றி தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். சில மாதங்களுக்கு நெல்லை மாவட்டம் கீழநத்தம் கிராமத்தை சா்ர்ந்த ராஜமணி என்ற திமுக – ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார். அவரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர். அவரும் இது போன்று ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கும் எவ்வித முன்விரோதம் மற்றும் காரணமும் ஏதும் இல்லை, அதே போன்ற தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் மணிமூர்த்தீஸ்வரம் கிராமத்தை சார்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதிலும் எவ்வித முன் விரோதமும், காரணமும் இல்லை. அதுபோல சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அருணாசலபேரி கிராமத்தை சார்ந்த அரசு ஊழியரான அன்பழகன் என்ற தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்த இளைஞர் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார். அந்த சம்பவத்திலும் எவ்வித முன் விரோதமும், காரணமும் இல்லை. இப்படியாக தொடர்ந்து காரணமில்லாமல் முன் விரோதமும் இல்லாமல் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் படுகொலை செய்யப்படுவது, வெட்டப்படுவதும் தாக்கப்படுவதும் என்ற சம்பவங்கள் தொடர்கிறது. இதனை தடுக்க முடியாமல் தமிழக காவல்துறை என்ன செய்கிறது? தடுக்க நடவடிக்கை எடுக்குமா?எடுக்காதா?

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தனியாக எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதையே மேற்படி சம்பவங்கள் காட்டுகிறது. மீண்டும் கலவரங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது எனவே தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கொலை செய்வதே ஒரு தொழிலாக கொண்ட கும்பலை காவல்துறை முறையாக கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்றிருக்காது.

மணக்கரை மணி கொலையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு சட்ட ரீதியாக பிணையில் வெளிவராமல் சிறையில் வைத்து வழக்கினை விரைந்து கடும் தண்டனையை வழங்கிட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட மணி அவர்கள் குடும்பத்திற்கு 25 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்கிட வேண்டுமென தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.”

Hits: 36

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *