Mon. Sep 25th, 2023

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் பணியில் இருந்த போது கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாரிமுத்து, இராமசுப்பு ஆகியோருக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டையே உலுக்கிய கொலைவழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது.

இயற்கை வளங்களை சுரண்டுபவர்களும், அதற்கு தடையாக இருக்கும் அதிகாரிகளை கொலை செய்பவர்களும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிச் செல்வது தான் வாடிக்கையாக இருந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து இரு மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. லூர்து பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், 5 மாதங்களுக்குள்ளாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. நீதி விரைவாக வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

தமிழ்நாட்டில் பொருளாதாரம், இயற்கை வளம் சார்ந்த குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமே, குற்றங்களை செய்து விட்டு எளிதாக தப்பிவிடலாம் என்ற எண்ணம் தான். ஒரு குற்றம் செய்தால் அதன் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே தண்டனை கிடைப்பது உறுதி என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டால், குற்றங்கள் கணிசமாக குறைந்து விடும்.

பிரான்சிஸ் கொலை வழக்கின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது தண்டனையே வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து குற்றவழக்குகளின் விசாரணையிலும் இதே வேகம் காட்டப்பட வேண்டும். இந்த வழக்கில் புலனாய்வு செய்த காவல்துறையினருக்கும், வழக்கை நடத்திய அரசு வழக்கறிஞர்கள் குழுவினருக்கும், துணிச்சலாக சாட்சியம் அளித்த சாட்சிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தால், உயர்நீதிமன்றத்திலும் திறமையான வழக்கறிஞர்களை நியமித்து குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கொல்லப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ்சின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுமென்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அவரது குடும்பத்தில் தகுதியானவர் இருக்கும் நிலையில் உடனடியாக அவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

Hits: 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *