Sun. Sep 24th, 2023

காங்கிரஸ் கட்சி செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கண்டன அறிக்கை “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுநர் மாளிகையில் இன்று (12.08.2023) நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய தமிழ்நாட்டின் ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்றும், பயிற்சி மையம் இருந்தால்தான் மாணவர்கள் நீட்டில் வெற்றி பெற முடியும் என்பது கட்டுக்கதை என்றும், மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்றும் தான் தோன்றித்தனமாக பேசியுள்ளார். ஆளுநரின் ஆவணப் பேச்சுக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதாமல் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களான திரு.மோகன்காமேஸ்வரன், திரு.பழனிச்சாமி, திரு.முகமதுரீலா, திரு.பாலாஜி, திரு.தணிகாசலம், திரு.ராமமூர்த்தி, திரு.சத்தியமூர்த்தி, திரு.கங்காராஜசேகர், திரு.ஆர்.பி.சிங், திரு.கே.எம்.ஷெரியன், திரு.கஸாலி போன்ற அனைவரும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளா? பதில் சொல்லுங்கள் ஆளுநர் அவர்களே!

தமிழ்நாட்டின் ஆளுநர், அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவை சிதைக்கின்றார். அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு, உண்மைக்கு புறம்பாக, எந்தவொரு தரவுகள் இல்லாமலும் அவர் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசியுள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்து ஆண்டுக்கு70 ஆயிரம் கோடி ரூபாயை லாபம் ஈட்டும் நீட் பயிற்சி மையங்களுக்கு துணை போவதாக இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவும் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

Hits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *