Sun. Sep 24th, 2023

நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை:

மாண்புமிகு அவைத் தலைவருக்கு வணக்கம்!
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அமைச்சரவை மீது கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.

அண்மையில் மணிப்பூருக்கு செல்லுகிற வாய்ப்பை பெற்றேன். இந்தியா கூட்டணி சார்பில் மணிப்பூருக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நானும் இடம் பெற்றிருந்த நிலையில், அங்குள்ள மக்களை நிவாரண முகாம்களில் சந்தித்தேன். மெய்த்தி மற்றும் குக்கி சமூகங்களைச் சார்ந்த இருதரப்பு மக்களையும் சந்தித்தோம். அந்த மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றி மிகுந்த வேதனையோடு பகிர்ந்து கொண்டார்கள். இருதரப்பிலும் பாதிப்புகள் நேர்ந்து இருக்கின்றன.
இருதரப்பிலும் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், இரு தரப்பினரும் சொன்ன வார்த்தை மணிப்பூர் மாநில அரசை மட்டுமல்ல, இந்திய ஒன்றிய அரசின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்து நிற்கிறோம், கடந்த 90 நாட்களாக எங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதை பற்றி பிரதமர் வாய் திறக்கவே இல்லை, கண்டிக்கவே இல்லை, மணிப்பூர் மாநில முதலமைச்சர் எங்களை வந்து சந்திக்கவே இல்லை, எங்களுக்கு ஆறுதல் கூறவே இல்லை என்று குக்கி சமூகத்தைச் சார்ந்த மக்கள் மட்டுமல்ல மெய்த்தி சமூகத்தைச் சார்ந்த மக்களும் தங்களுடைய வேதனைகளை பகிர்ந்து கொண்டார்கள்.

ஆகவே, மணிப்பூர் மக்களே மணிப்பூர் மாநில அரசின் மீதும் இந்திய ஒன்றிய அரசின் மீதும் நம்பிக்கை இழந்து இருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையை இழந்து நிற்கிறோம். அங்கே 150 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள், கார்க்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவியும் அங்கு மானபங்கம் படுத்தப்பட்டிருக்கிறார். அவரே வேதனைப்பட்டு சொல்லியிருக்கிறார், ‘இந்த நாட்டை காப்பாற்ற முடிந்த என்னால் என் மனைவியை காப்பாற்ற முடியவில்லை’ என்று அவர் சொன்னது உலக அரங்கில் எதிரொலித்திருக்கிறது. இது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் மீதான நம்பிக்கையை இன்றைக்கு நாடு இழந்து நிற்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன, 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்றைக்கு நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சொந்த மண்ணிலேயே இந்த மண்ணின் மைந்தர்கள் அகதிகளாக நிற்கும் அவலம் இந்த அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தி மிகக் கேவலமான கூட்டு பாலியல் வல்லுறவை நடத்தி இருக்கிறார்கள். இதற்காக உள்ளபடியே இந்த அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வரியில் பிரதமர் மோடி அவர்கள் இது கண்டிக்கத்தக்கது என்று சொல்லிவிட்டு அவர் தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த அவைக்கு அவர் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைக்க கூடிய வகையில் எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது என்பதே இந்த அரசின் மீதான நம்பிக்கை போய்விட்டது என்பதை உணர்த்துகிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மணிபூரில் அரசுக்கான ஆயுதங்கள் கொள்ளை போய் இருக்கின்றன. குறிப்பாக மெய்த்தி சமூகத்தைச் சார்ந்த மக்கள் அந்த ஆயுதங்களை கொள்ளை அடித்ததாக மணிப்பூர் அரசே சொல்லுகிறது. அங்குள்ள ஆட்சியாளர்களே சொல்லுகிறார்கள். அப்படி கொள்ளை போன ஆயுதங்களை மீட்பதற்கு கொள்ளையடித்துச் சென்றவர்களை கைது செய்வதற்கு அந்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆளுநர் அவர்களை சந்தித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் இந்த கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தினோம். அவர் இந்திய ஒன்றிய அரசின் கவனத்திற்கு அதை எடுத்துச் செல்வதாக சொன்னார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

இன்றைக்கும் மக்கள் அங்கு பாதுகாப்பாக வாழ முடியவில்லை. மணிப்பூரில் மட்டுமல்ல ஹரியானாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இஸ்லாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. அவர்கள் தேடித்தேடி இஸ்லாமியர்களை படுகொலை செய்கிறார்கள். விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தல் போன்ற அமைப்புகள் வெளிப்படையாக கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் உறுதிமொழி எடுக்கிறார்கள். நாங்கள் இங்கு இந்து ராஷ்டிரியத்தை அமைப்போம், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்து ஒழிப்போம் அதற்காகவே நாங்கள் இங்கு ஆயுதம் ஏந்துகிறோம் என்று வெளிப்படையாக பேசுகின்ற அவலம் இங்கே தலைவிரித்து ஆடுகிறது.

குஜராத்தில் மட்டுமல்ல ஹரியானாவில் மட்டுமல்ல ஜெய்ப்பூர் ரயிலிலே சென்ற ரயில்வே காவலர் ஒருவர் இஸ்லாமியர்களை தேடி தேடிச் சென்று கோச் கோச்சாக சென்று இஸ்லாமியர்களை அடையாளம் கண்டு மூன்று பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பிரதமர் மோடிக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கோஷமிட்டு இருக்கிறார். ஆகவே நாட்டில் என்ன நடக்கிறது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, குறிப்பாக இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அஞ்சி அஞ்சி வாழக்கூடிய அவலம் இருக்கிறது. தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்தியா முழுவதும் இன்றைக்கு பெண்கள் அச்சத்தில் நீடித்து கிடக்கிறார்கள், அச்சத்தில் விழுந்து கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட தலித் விரோத அரசின் மீது, பழங்குடி மக்களுக்கு எதிரான அரசின் மீது, இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான அரசின் மீது இன்றைக்கு ஒட்டுமொத்த நாடே நம்பிக்கை இழந்து கிடக்கிறது.

சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல இந்து பெரும்பான்மை மக்களுக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை. கடந்த 9 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால், அதே பெரும்பான்மையான இந்துக்களாக இருக்கின்ற சாதாரண சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய கேஸ் சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கிறது. தக்காளி கிலோ இன்றைக்கு 200 ரூபாய் 300 ரூபாய் என்று விற்பனை ஆகிறது. இதில் பாதிக்கப்பட கூடியவர்கள் பெரும்பான்மையான இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான். ஆகவே, இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, இந்து பெரும்பான்மை மக்களுக்கும் எதிராக இருக்கிறது என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒட்டுமொத்த இந்து மக்கள் தான் கர்நாடக மாநிலத்தில் இந்து சமூகத்தைச் சார்ந்த மக்கள் தான் பிஜேபியை வீழ்த்திவிட்டு காங்கிரஸை இன்றைக்கு ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். ஆக ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை இழந்து இருக்கின்ற இந்த அமைச்சரவையின் மீது பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான இந்த அமைச்சரவையின் மீது நான் எனது நம்பிக்கையின்மையை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

எஸ்.சி/எஸ்.டி., மற்றும் ஓபிசி மக்களுக்கான இடஒதுக்கீடு நிரப்பப்படவில்லை, அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. திட்டமிட்டே சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டு அந்த இஸ்லாமிய கிறித்துவ மக்களின் கல்வியை பறிக்கிறார்கள். அதேபோல காலி பணியிடங்கள் ஏராளமாக இருக்கின்றன, அவற்றை நிரப்புவதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. ஆகவே, இந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். பிரதமர் அவர்கள் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அமருகிறேன்.

நன்றி, வணக்கம்!

Hits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *