Mon. Sep 25th, 2023

தற்போதைய சூழலில், இலவசங்கள் தான் ஆகச்சிறந்த பேசுபொருளாக இருக்கின்றன. “இலவசங்கள் தேவை” என்று ஒரு சாரார் (சமூகநீதிக் கொள்கையாளர்கள்) அதை ஆதரிக்க, “இலவசங்கள் தேவையில்லை” என்று எதிர்க் குரல்களும் கேட்கவே செய்கின்றன. இந்த எதிர்க்குரலுக்குப் பின்னர், Identity Politics தான் இருக்கின்றது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அரசியல் மற்றும் சமூக நீதிப் பார்வையோடு பார்க்கையில், மக்கள் நலனுக்காகவும், அவர்களது விடுதலைக்காகவும், இது மிக முக்கியத் தேவை என்பதே நிதர்சனம்.

இந்த இலவசங்கள் செய்தது என்னவென்று சற்றே பொருளாதாரக் கண்ணாடி கொண்டு பார்ப்போமா?

1.மதிய உணவுத் திட்டம் – மாநிலத்தின் வளர்ச்சி – 1925 முதல் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தான் இதன் ஆரம்பப் புள்ளி. அதன் பின்னர், முதல்வராக இருந்த காமராஜர் அவர்கள், இதனை மாநிலம் முழுவதற்கும் செயல்படுத்த, அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள், ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு விரிவு படுத்தினார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்காக மாணாக்கர்களை பள்ளிக்கு வரவழைக்க கொண்டுவரப்பட்டது இந்த திட்டம். விளைவு – கிட்டத்தட்ட 100 வருடங்கள் கழித்து, கல்வியில், தொழிற்துறையில், ஜிடிபி வளர்ச்சியில் மேம்பட்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதன் தாக்கம் எந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறதென்பதற்குச் சான்று – யாரும் இப்போது இதை இலவசமென்று குறிப்பிடுவதில்லை. “மதிய உணவுத் திட்டம்” என்றே அழைக்கிறார்கள். (இலவசம் மிஸ்ஸிங்!!!)

2.இலவச அரிசி – அறிஞர் அண்ணா தொடங்கி வைத்த “ரூபாய்க்கு மூன்று படி அரிசி” திட்டம், ஒன்றிய அரசின் “Food Corporation of India” வை நம்பியே இருந்ததால், நம் மாநிலத்திற்கு கிடைக்கவேண்டிய பங்கினை போராடியே பெறவேண்டியதாக இருந்தது. அண்ணாவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் மனதில் உதித்ததுதான் “Tamil Nadu Civil Supplies Corporation”. ஒன்றிய அரசின் கையையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையை கண்டு, ஒரு end-to-end (from procurement to distribution) நிறுவனத்தை தொடங்கினார். விளைவு: பசி என்கிற பிணி போக்கப்பட்டு, கல்வி மற்றும் தொழிற்துறையில் இன்று வரையில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு. குடும்பத்தின் உணவுத் தேவைக்காக உழன்று கொண்டிருந்த மக்கள் இப்பொழுது அதைப் பற்றி கவலையில்லாமல் தங்களது பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர். இதுவே ஒரு பெரிய மாற்றமென்று நம்புகிறேன்.

3.இலவச மகளிர் பேருந்துப் பயணம் – தற்போதைய முதலமைச்சர், திரு. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தது இந்த திட்டம். மேலோட்டமாக பார்த்தால், இது வெறும் இலவசப் பயணமாக தெரியும். Populist measure என்றும் கூட இதை சொல்கிறார்கள். ஆனால் நிஜத்தில்? இதுவொரு மாபெரும் பொருளாதாரப் புரட்சி. பெண்கள், குறிப்பாக, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்பவர்களுக்கு, வேலைவாய்ப்பிற்கு, அவர்களது சொந்த கிராமம்/சிறு நகரமே ஒரே வாய்ப்பாக இருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான மகளிர்க்கு வேலை கிடைக்காமலோ அல்லது மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு போகும் சூழலோ இருந்தது. வேறு ஊருக்கு சென்று வேலை பார்ப்பதென்றால், பேருந்துப் பயணச் செலவே பெரும்பான்மையாக இருக்கும். ஆகையால், தங்கள் ஊர்களை விட்டு வெளியே செல்லாமலே இருந்தனர். இந்த இலவச பேருந்துப் பயணம் அப்படிப்பட்ட மகளிர்க்கு, சிறகுகளை கொடுத்துள்ளது. இனி அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வேலைக்குச் செல்லலாம். அதிக சம்பளம் எங்கு கிடைக்கிறதோ, அங்கு வேலைக்குச் செல்லலாம். விளைவு: அவர்கள் சார்ந்த குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தன்னிறைவு, increase of their family’s purchasing power (அரசிற்கு GST வருமானம்), தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் அதிக அளவில் womenpower கிடைத்தல், அதன் வாயிலாக அரசிற்கு வருமானம் (அரசிற்கு Corporate Tax மூலம் வருமானம்) கிடைக்கின்றது. மேற்கண்ட திட்டங்களைப் போல், குறுகிய காலத்தில் இதனுடைய பயனை தெரிந்துகொள்ள முடியாது. இது ஒரு சிறிய பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு மட்டுமே. அது புயலாக மாறுவது எப்பொழுது என்பதை ஒரு சில மக்களால் கண்டுகொள்ள முடியாது.

“என்கிட்ட பணமிருக்கு, நான் காசு கொடுத்து போவேன்” என்று பேசுகிற சீமாட்டிகளுக்கும், “என்னப்பா கம்பெனி இது? ஒரு காபி கூட free யா தர மாட்டேங்கிறாங்க” என்று தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து அனைத்தையும் இலவசமாக எதிர்பார்த்துக்கொண்டு, வெளியே வந்து “இந்த இலவசம் தான்பா மக்களை சீரழிக்கிது” என்று சமூக வலைத்தளங்களில் சலம்பும் சீமான்களுக்கும் இது புரிய வாய்ப்பே இல்லை.

4.மகளிர் உரிமைத் தொகை – மகளிரைத் தவிர மற்ற அனைவரும் இதைப்பற்றி பேசுகின்றனர். சுயமரியாதையின் காரணமாக, இலவசம் என்று சொல்லாமல், “உரிமைத் தொகை” என்று பெயரிட்டதிலேயே சமூக நீதி வெளிப்படுகிறது. அதுவும், பணம் இருக்கின்றதே என்று அனைவருக்கும் கொடுத்து விடாமல், சரியான பயனாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மட்டுமே சென்று சேரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த திட்டம். மேம்போக்காகப் பார்த்துவிட்டு, இது ஒரு “Populist Measure” என்று கூவிக் கொண்டிருந்தாலும், இந்த உரிமைத் தொகையை பெரும் மகளிர்க்கு, இது ஒரு உயிர் காக்கும் தொகையே அன்றி வேறெதுவுமில்லை.

மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவச அரிசித் திட்டங்களில் ஏற்பட்ட பயன்களை 50 வருடங்கள் கழித்து GDP வளர்ச்சியாகவும், GER வளர்ச்சியாகவும், தொழில்துறை வளர்ச்சியாகவும் பார்க்கிறோம்.

மகளிர் இலவச பேருந்துப் பயணம் மற்றும் உரிமைத் தொகைகளின் சாதகங்களை நாம் கண்டறிய (with sufficient data) நமக்கு இன்னும் 10 வருடங்களாவது ஆகும்.

அதுவரையில், தூற்றுவோர் தூற்றிக்கொண்டிருக்கட்டும். நாம் நமது சமூக நீதி இலக்கினை நோக்கி, வீர நடை போடுவோம்.

        - திரு K.ராஜேஷ்(Twitter@rajeshkmoorthy)நிறுவனர்-ஸ்கைமேன் இன்வஸ்மென்ட்ஸ் 

Hits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *