இன்சூரன்ஸ் – ஏன்?
பல்வேறு எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு பெரும் மன அமைதியைப் தரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பெரும்பாலோர் மனதில் உள்ள கேள்விக்கு பதிலளித்து விடுகிறேன். இன்சூரன்ஸ் மற்றும் சேமிப்பை ஒன்றாக செய்யலாமா?
கூடவே கூடாது. இன்சூரன்ஸ் தனி. சேமிப்பு தனி. இவையிரண்டும் சேர்ந்த products (ULIP) அதை விற்கும் நிறுவனத்திற்கு தான் லாபமே தவிர உங்களுக்கு அல்ல.உங்கள் உறவினரோ, ஏஜெண்ட்டோ எவ்வளவு கனிவாக பேசினாலும் ULIP என்கிற மாய வலைக்குள் விழுந்து விடாதீர் நண்பர்களே. இயன்றளவில்.. இல்லை இல்லை, ULIPஐ அறவே ஒதுக்குங்கள். உங்கள் சேமிப்பிற்கு அதுதான் நல்லது. Endownment பாலிசியும் கூடவே கூடாது.
சரி. இழைக்குச் செல்வோம்.
துரதிர்ஷ்டவசமான மரணம் அல்லது உடல் நிலையில் தொய்வு / நோய் போன்ற வாழ்க்கையில் நிச்சயமற்ற நிலைகள் எந்த நேரத்திலும் உருவாகலாம். இதைப்போன்ற சூழ்நிலைகள் ஏற்படுத்தும் பொருளாதார சேதாரத்தை எவ்வாறு குறைக்கலாம் / அறவே தவிர்க்கலாம் என்பதற்கான பதில் ஒன்றே ஒன்றுதான்… இன்சூரன்ஸ். எதற்கு?
1.மருத்துவ அவசர நிலைகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், ஏதேனும் நோய்களின் தாக்கம், அதற்கான சிகிச்சை மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் மருத்துவ பராமரிப்புகள்.
2.குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவரின் துரதிர்ஷ்டவசமான மரணத்தால் குடும்பத்திற்கு ஏற்படும் நிதி இழப்பை தவிர்க்க
3.உங்களுக்குப் பின்னர், உங்கள் குடும்பம், நீங்கள் வாங்கிய கடன்களை சிரமமில்லாமல் அடைக்க.
4.நீங்கள் இல்லாத பட்சத்தில் உங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை இன்று உள்ளது போலவே பராமரிக்க
5.காப்பீட்டுத் தொகையின் மூலம் (உங்களுக்குப் பின்) குடும்பத்தை நடத்துவதற்கான செலவுகளை ஈடுசெய்ய
6.உங்களுக்குப் பின் உங்கள் குழந்தையின் கல்வி் மற்றும் எந்த சமரசமும் இல்லாமல் அவர்கள் தங்களது கனவுகளையும் லட்சியங்களையும் தொடர.
7.எதிர்பாராத பேரழிவு அல்லது சேதம் ஏற்பட்டால் உங்கள் வீட்டைப் பாதுகாக்க.
உங்கள் வீட்டிற்கு ஏற்படும் சேதங்களுக்கு கவரேஜ் பெறவும், பழுதுபார்ப்பு அல்லது மறுகட்டமைப்புக்கான செலவில் எது தேவையோ அதைச் செலுத்தவும் உதவும். வீட்டினுள் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பொருட்களுக்கு கவரேஜ் இருந்தால், காப்பீட்டுத் தொகையில் மாற்றுப் பொருட்களை வாங்கலாம்
என்னென்ன வகையான இன்சூரன்ஸ் உள்ளன?
1.Health – உடல்நலம் சார்ந்த அபாயங்களுக்கு
2.Term – உங்களுக்குப் பின் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க.
3.Vehicle – வாகனம் சார்ந்த அபாயங்களுக்கு
4.Home – வீட்டிற்கு ஏற்படும் சேதங்கள் உங்களுக்கு பொருளாதார சேதத்தை ஏற்படுத்தாமல் தவிர்க்க.
1.ஹெல்த் இன்சூரன்ஸ்
உடல்நலம் (Prevention & Cure) சார்ந்த மருத்துவச் செலவுகளை ஈடுகட்டவே இந்த வகையான காப்பீடு. இந்த காப்பீட்டுத் திட்டங்கள் மருத்துவ அவசரநிலைகளின் போது பயனுள்ளதாக இருக்கும். பாலிசிதாரர், நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா வசதியையும் (cashless) பெறலாம்.
இதில் நீங்கள் பொதுவான நோய்களுக்கும், Critical illness (கேன்சர், கிட்னி failure, எய்ட்ஸ்), ஆக்சிடெண்ட் போன்றவைக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.
2.Term (ஆயுள்) காப்பீடு
பாலிசியின் தவணைக்காலத்தின் போது நீங்கள் இறந்தால் உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக நீங்கள் பெறக்கூடியது.பாலிசி காலத்துக்குள் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால் மொத்த காப்பீட்டு தொகையும் உங்கள் குடும்பத்திற்கு (Nominee) வழங்கப்படும். தற்கொலை தவிர மற்ற எல்லா விதமான மரணங்களுக்கும், இந்த காப்பீட்டுத் செல்லுபடியாகும். இந்த வகையான காப்பீடு, உங்களின் வருமானத்திற்க்கேற்ப, சில லட்சங்களில் இருந்து பல கோடிகள் வரை காப்பீடு வழங்கப் படுகிறது. மாதாந்திர முதல் வருடாந்திர பிரீமியம் வரை உங்கள் நிலைக்கேற்ப கட்டுவதற்கு options உண்டு. கிரெடிட் கார்டு மூலம் கட்டிவிட்டு அதை EMI யாக மாற்றிக் கொள்ளலாம்.
3.வாகன காப்பீடு
விபத்து, திருட்டு மற்றும் சேதாரம் போன்ற எதிர்பாராத தருணங்கள் உங்கள் சேமிப்பை குறைக்காமல் இருக்க வாகன காப்பீடு அவசியமாகிறது. நம் நாட்டில் வாகன காப்பீடு கட்டாயமாக்கப் பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.
4.வீட்டுக் காப்பீடு
உங்கள் அன்பு இல்லத்திற்கு ஏற்படும் எதிர்பாராத சேதாரங்களை (நிலநடுக்கம், தீப்பற்றுதல் மற்றும் திருட்டு) ஈடுகட்ட இந்த வகையான இன்சூரன்ஸ் உதவுகிறது. இந்த பாலிசியில் உங்களது வீட்டு உபகரணங்களையும் (டீவி, கம்ப்யூட்டர், லேப்டாப், நகைகள்) நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆகையினால் எதிர்பாராத விஷயங்கள் உங்கள் பொருளாதாரத்தை சீர்குலைக்காமல் இருக்க காப்பீடு அவசியமாகிறது.
- Mr.ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி ,
நிறுவனர் - ஸ்கைமேன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்
Hits: 1