Mon. May 29th, 2023

சிபிஐ (எம்) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இது மட்டுமின்றி பாடப்புத்தகங்களை மாற்றியமைப்பது, சுதந்திரப்போராட்ட வரலாறு உட்பட இந்திய வரலாற்றை மத அடிப்படையில் மாற்றி கற்பிப்பது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு நிலைமைகளுக்கேற்ப தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்தது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்படையிலான கல்வி கிடைத்திட நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் குழுவின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தி மிகுந்த கவலையளிப்பதாக இருந்தது. அரசின் உயர்ந்த நோக்கம் பாதிக்கப்படுமோ என்ற கேள்விகளும் கல்வியாளர்கள் மத்தியில் எழும்பியது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மாநில அடிப்படையிலான கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சரைச் சந்தித்து முறையிட்டோம்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு குழுவை சீரமைத்துள்ளதுடன் தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்துவமான மாநிலக் கொள்கையை உருவாக்கும் பணியில் இக்குழு ஈடுபடும் எனவும், குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம்மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்பதுடன், விரைவில் அறிக்கையைப் பெற்று அதன் மீது சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.”

Hits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *