Mon. May 29th, 2023

விசிக நிறுவனர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “பொருளாதர அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட “அரசியல் சட்ட அமர்வு” தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்ட தீர்ப்பில் தவறு இருப்பதாக சீராய்வு மனுக்கள் நிரூபிக்கவில்லை என இந்த அமர்வு கூறியுள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ஒருவர் மட்டுமே புதிதாக இடம் பெற்றிருப்பவர். மற்ற நால்வரும் ஏற்கனவே தீர்ப்பளித்தவர்கள் ஆவர். தங்களின் நிலைபாட்டினை மறுபரிசீலனை செய்ய முன்வரவில்லை. இந்த சீராய்வு மனுக்களை விசிக, திமுக உள்ளிட்டப் பல்வேறு அரசியல் கட்சிகளும், பிற்படுத்தப்பட்டோர் சமூக அமைப்புகளும் தாக்கல் செய்திருந்தன. அம்மனுக்கள் அனைத்தையும் இந்த அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

விசிக சார்பில் இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா அவர்கள் வாதிட்டார். அவர் பினவரும் வாதங்களை வலுவாக முன்வைத்தார். அதாவது, “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது, அதனால் நிர்வாகத் திறன் குறைந்து விடக்கூடாது’ என ஒரு நிபந்தனை வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், “அரசியலமைப்பின் 340 ஆவது பிரிவின் கீழ், ஒரு சமூகத்தைப் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்கிறபோது அது சமூக ரீதியில் பிந்தங்கித்தான் இருக்கிறதா என விசாரிப்பதற்கு ஒரு கமிஷன் நியமிக்கப்பட வேண்டும்” என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது 103ஆவது 1 திருத்தத்தின்படி வழங்கப்பட்டுள்ள உயர்சாதியினருக்கான இந்த பத்து சதவீத இடஒதுக்கீட்டிற்கு, “அத்தகைய ‘நிர்வாகத் திறன் பற்றிய நிபந்தனையும்’ விதிக்கப்படவில்லை; விசாரணைக் கமிஷனும் அமைக்கப்படவில்லை” என தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரப் பின்னடைவுக்கான காரணம் சமூகக் கட்டமைப்பில் நிலவும் சமத்துவமின்மை தான் என்றும், அதனால், பிற்படுத்தப்பட்ட நிலை என்பது எந்தவொரு இடஒதுக்கீட்டிலும் அதன் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது’ என்று சுட்டிக் காட்டியதோடு, “பிற்படுத்தப்பட்ட நிலமையைப் புறக்கணித்து சாதி அல்லது வருமானம் போன்ற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்கும் முயற்சிகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது” என்பதையும் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார்.

சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் பாலாஜி வழக்கின் தீர்ப்பில் (பாலாஜி -எதிர்- மைசூர் மாநிலம்) ரத்து செய்யப்பட்டது. அதுபோல வருமானத்தின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்குவதை இந்திரா சாஹ்னி தீர்ப்பு (இந்திரா சாஹ்னி -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) ரத்து செய்தது. ஆனால், தற்போது உச்சநீதிமன்றம் இந்த வாதங்கள் எதையும் மறுக்கவோ, பதிலளிக்கவோ இல்லை என்பதோடு, தமது தீர்ப்பை சீராய்வு செய்யவும் மறுத்திருக்கிறது. இந்நிலையில், இனி சட்டப் போராட்டம் நடத்துவதில் பயனில்லை’ என்ற முடிவுக்கு இது நம்மைத் தள்ளியிருக்கிறது.

10% இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டின் பயனாளிகளை விரிவுபடுத்துவதற்கானது அல்ல, மாறாக ஒட்டு மொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்கானதாகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே சில நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தமது கருத்துகளை வெளிப்படையாகவே பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய சூழலில், சமூகநீதிக்காகப் போராடும் அரசியல் கட்சிகள் யாவும் ஒருங்கிணைந்து 10% இட ஒதுக்கீடு சட்டத்தை இனி அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 2024 பொதுத் தேர்தல் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, ஓபிசி, எஸ்சி-எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்கும், அத்துடன் இட ஒதுக்கீட்டின் அளவை மக்கள் தொகை அடிப்படையில் சமூகவாரியாக உயர்த்துவதற்குரிய செயல்திட்டத்தை வகுப்பதற்கும் முன்வரவேண்டும் என சமூகநீதிக்கான அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விசிக சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்.”

Hits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *