Mon. May 29th, 2023

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கஸில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பிலிருந்து நந்தகுமார் இ.ஆ.ப மாற்றப்பட்டதாலும், அந்தப் பொறுப்புக்கு இதுவரை வேறு எவரும் அமர்த்தப்படாததாலும் பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவி நீக்கப்பட்டு, மீண்டும் இயக்குனர் பதவி ஏற்படுத்தப்பட இருப்பதாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. அது நிறைவேற்றப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் நீக்கப்பட்டு, அதன் பொறுப்புகள் அனைத்தும் பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்ட போதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. பள்ளிக்கல்வி இயக்குநர் என்பது அதிகாரம் சார்ந்த பணியல்ல. மாறாக அனுபவம் சார்ந்த பணியாகும். சாதாரண ஆசிரியராக பணியைத் தொடங்கும் ஒருவர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இணை இயக்குநர், பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குநர் என, பல்வேறு பொறுப்புகளை சுமந்து, அவற்றில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தான் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பை நிர்வகிக்க முடியும்; இ.ஆ.ப. அதிகாரிகளால் நிர்வகிக்க முடியாது என்று கூறியிருந்தேன்.

பள்ளிக்கல்வித்துறையில் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற பல குழப்பங்களுக்கு, ஆணையரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். இனியும் அத்தகைய குழப்பங்கள் நடக்கக்கூடாது. அதை உறுதி செய்வதற்காக பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை நீக்கி விட்டு, பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும். பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குனருக்கு வழங்கப்பட வேண்டும். அந்த இடத்தில் அனுபவம் உள்ள நேர்மையான அதிகாரி அமர்த்தப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதவியும் காலியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முழுநேரத் தலைவர் இல்லாததால் வாரியம் முடங்கிக் கிடக்கிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உடனடியாக முழுநேரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும். “

Hits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *