Tue. Mar 19th, 2024

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம் பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வினோத்குமார் அவரிடம் இருந்த பணம் முழுவதையும் ஆன்லைனில் சூதாடி இழந்துள்ளார். கடன் வழங்கும் செயலிகள் மூலமாகவும் கடன் வாங்கி சூதாடியுள்ளார். சூதாடுவதற்காக எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்த அளவுக்கு ஆன்லைன் சூதாட்டம் கொடுமையானது!

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் உயர்நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 44-ஆவது தற்கொலை இது.ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும்!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.இரவி தான் பொறுப்பேற்க வேண்டும்!

தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விளக்கியுள்ளது. இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்!”

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *