அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால், நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றுப் புகழும் இன்பமும் அடைய வேண்டுமானால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது கல்வி. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்வியையும்; அதனுடன் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தூய்மையாக நடந்து கொள்ளும் ஒழுக்கம் என்னும் மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கும் அன்பு, அறன், சான்றாண்மை, பண்பாடு ஆகியவற்றையும் போதிப்பவையாக விளங்குபவை பல்கலைக்கழகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒழுக்கமின்மை நிலவுவதும், வன்முறை தலைவிரித்து ஆடுவதும் மன வேதனையை அளிக்கக்கூடியது.இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமாக விளங்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். அதனால்தான், இந்தியத் தலைநகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைக் கற்பித்தல், கற்றல் மற்றும் ஆய்வு செய்தல் திட்டங்களுக்காக தமிழிருக்கை நிறுவப்படுவதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, 2003 ஆம் ஆண்டு, ஒட்டுமொத்த நல்கைத் தொகையாக ஐம்பது இலட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரே தவணையில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கினார்கள்.இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் சங்க அறையில் ஒரு பிரிவினர் திரைப்படத்தை திரையிட திட்டமிட்டு இருந்ததாகவும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த மாணவர்கள் அதே அறையில் மராத்திய மன்னர் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாட வலியுறுத்தியதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் மராத்திய மன்னர் சிவாஜி, லெனின், கார்ல் மார்க்ஸ் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் படங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, மூலக்கூறு மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மாணவர் திரு. நாசர் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டு அவருடைய மண்டை உடைந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. தந்தை பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் படங்களை சேதப்படுத்தியதோடு, தமிழக மாணவர் மீது கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒழுக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய இடமாகவும், அறிவை அதிகரித்துக் கொள்ள வேண்டிய இடமாகவும், பண்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டிய இடமாகவும், கருத்துகளை பரிமாறிக் கொள்ள வேண்டிய இடமாகவும் விளங்க வேண்டிய பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது என்பது இளைய சமுதாயத்தினருக்கு உகந்ததல்ல. சொல்லுக்கு சொல், வார்த்தைக்கு வார்த்தை, பேச்சுக்கு பேச்சு என்ற முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டிய பல்கலைக்கழகங்கள் வன்முறை கூடாரங்களாக மாறுவதை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் உண்டு. பல்கலைக்கழக வளாகத்திற்குள் தினமும் என்னென்ன நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்திருந்தால் இதுபோன்ற வன்முறைச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். இதைச் செய்யாதது பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் திறமையின்மையைத்தான் காட்டுகிறது.தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு. நாசர் மீது கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கையினை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
Hits: 0