Sat. Apr 20th, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி “தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது.

இனம் – மண் – மக்கள் – விளைச்சல் – உணவு – மற்ற உயிரினங்கள்- இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா! புனைவுகள் இல்லாத பண்பாட்டுப் பெருவிழா!

வானம் கொடுத்தது; பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான்நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம்.

புதுப்பானையில் புத்தரிசி போட்டுப் புத்தொளி ஊட்டி, அடுப்பு மூட்டிப் பானைக்கு மேலே வழிந்தோடும் அன்பு நுரையைப் போல நாடு முழுவதும் அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்!

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள். அதனால்தான் இந்தத் தை மாதத்தைத் தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல் திருநாளைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றத்துடன் கொண்டாட ஆயிரம் ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை. செங்கரும்பு எனப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளோம்.

சாதி மதப் பாகுபாடுகள் எவையும் இல்லாமல் தமிழர்கள் அனைவரும்- தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பொதுவிழாவாகவே பொங்கல் விழா என்றும் திகழ வேண்டும்!

தாய்த்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும்!

“செங்கரும்பைப் போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும்” என்று கூறி அனைவர்க்கும் எனது தைத்திருநாள் தமிழர் பெருநாள் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Visits: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *