நேற்று முதல் அஜித்-விஜய் ரசிகர்களிடையே போட்டி நடந்து வருகிறது. அது எதிர்பார்த்ததுதான். அதை விட அதிகம் எதிர்பார்த்தது ரசிகர்கள் குறித்த விமர்சனம். ‘இவங்கள்லாம் உ…ருப்படுவாங்களா?’, ‘இவங்க பெற்றோரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது…’ என்றெல்லாம் பல்வேறு விதமான அங்கலாய்ப்புகள். ஒரு ரசிகர் ஒரு வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டு இறந்ததில் ‘அந்தப் பையனுக்கு நல்லா வேணும்!’ என்று சாபங்கள்.
என்னை குறிப்பாக ஆச்சரியப்படுத்தியது ஒரு ரசிகர் அலகு குத்திக் கொண்டு நடிகரின் கட் அவுட்டுக்கு மாலை போட்டதற்கு வந்த விமர்சனங்கள். மக்கள் பொங்கியே எழுந்து விட்டனர். ‘எவ்ளோ டைம் வேஸ்ட்!’, ‘என்ன ஒரு மூடத்தனம்!’ என பல்வேறு அர்ச்சனைகள் அந்தப் பசங்களுக்கு விழுகின்றன.
அலகு குத்திக் கொள்வது, தீ மிதிப்பது, காவடி தூக்குவது, வித விதமாக மாலை போடுவது இதெல்லாம் கடவுளர்களுக்கு பற்பல நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. இன்றும் இவையெல்லாமே விமரிசையாக நடக்கின்றன.
தங்கள் ஊர்த் திருவிழாவில் ஒருவர் மாரியம்மனுக்கு அலகு குத்திக் கொள்வதை ஃபோட்டோ போட்டால் அதில் வந்து ‘என்ன ஒரு மூடத்தனம்?’, ‘What a waste of time!’, ‘இதுங்கள்லாம் எப்போதான் உருப்படப் போவுதோ!’ என்றெல்லாம் யாரும் கமெண்ட் பதிவதில்லை.
In fact, என் போன்ற நாத்திகர்கள் கூட செய்வதில்லை. மரியாதையாக கடந்து விடுகிறோம். ஆனால் நடிகர்களுக்கு செய்தால் மட்டும் ஏன் கோபம் வருகிறது? கடவுளுக்கு காவடி தூக்கினால் அது மரியாதை; அது நேர, பண விரயமில்லை; நடிகருக்கு தூக்கினால் மட்டும் அவன் உருப்படாதவனாகி விடுகிறான். அது எப்படிங்க?
சாமிக்கு செய்வதும் கூத்தாடிகளுக்கு செய்வதும் ஒன்றா என்று கேட்கலாம். இரண்டுக்கும் என்ன வித்தியாசங்கள் என்று யாராவது சொல்லுங்களேன்? கடவுளுக்கு காவடி தூக்குவதன் மூலம் எனக்கு இந்தந்த நன்மைகள் நடக்கின்றன, இந்த வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன, என்று நம்மில் யாராவது நிரூபிக்க முடியுமா?
கண்டிப்பாக முடியாது. கடவுளுக்கான வழிபாடுகள் நமக்குக் கிடைக்கும் ஒரு ஆசுவாசம்; ஒரு ஆறுதல். ஒரு சின்ன நம்பிக்கை. அவ்வளவுதான். அதே போலத்தானே ரசிகர்கள் செய்வதும்?
சொல்லப் போனால் கடவுளுக்கு தூக்கும் காவடியிலாவது ஒரு சுயநலம் தொக்கி இருக்கிறது. சாமிக்கு உகந்தவற்றை நாம் செய்தால் உச்சி குளிர்ந்து நமக்கு உகந்ததை சாமி செய்யும், எனும் ஒரு லஞ்சப் பரிவர்த்தனை எதிர்பார்ப்பு இருக்கிறது.
ரசிகர்கள் அதையெல்லாம் கூட எதிர்பார்க்காமல் செய்கிறார்கள். அவர்கள் நடத்துவது வெறும் கொண்டாட்டம் மட்டுமே! Just having fun! அதிலென்ன உங்களுக்கெல்லாம் கோபம்?
அதெல்லாம் சரி, அதுக்காக சாகலாமா, என்று கேட்கலாம். சரி, சாமி கும்பிடப் போய் செத்தவர்கள் கணக்கை திறந்து பார்க்கலாமா? சுதந்திரத்துக்கு முன் ஒவ்வொரு கும்பமேளாவிலும் ஆயிரக்கணக்கனோர் காலராவில் மாண்டிருக்கிறார்கள். கோயில் திருவிழாக்களில் நடந்த தள்ளுமுள்ளு கணக்குகள் சொல்லி மாளாது.
சமீபத்தில் கூட ஒரு தேர்த்திருவிழாவில் தேர் எரிந்து போய் சிலர் இறந்து போனார்கள். அந்த சம்பவம் நடந்த போது யாரும் ‘அவங்களுக்கு நல்லா வேணும்! அவங்கள பெத்தவங்களை நினைச்சா கோபம் கோபமா வருது!’ என்றெல்லாம் கரித்துக் கொட்டவில்லை. அய்யோ பாவம் என்று மனமுருகி கண்ணீர் வடித்தார்கள்.
அது என்ன கோயில் திருவிழாவில் செத்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி? ரசிகர் திருவிழாவில் செத்தவனுக்கு மட்டும் சாபம்? கற்பனையான ஒரு புராணப் பாத்திரத்துக்காக சாவது அதி புத்திசாலித்தனம். திரையில் தோன்றும் ஒரு கற்பனை கதாபாத்திரத்துக்காக சாவது மட்டும் மூடத்தனமா? இது என்ன சார் உங்க லாஜிக்?
ஆனால், இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொண்டு பிரச்சினை பண்ணுகிறார்களே என்று ஆரம்பிக்காதீர்கள்! மதங்களுக்குள் நடந்த சண்டை ரிஜிஸ்டரை நான் திறக்க ஆரம்பித்தால் தாங்கவே தாங்காது. மதங்களுக்குள் நடந்த போர்களை கணக்கிட்டால் ஒப்பீட்டில் ஹிரோஷிமா, நாகசாகி கூட மொக்கையாகத் தெரியும்.
(சுமார் 2.25 லட்சம் பேர் ஜப்பான் அணுகுண்டு வெடிப்பில் இறந்திருக்கிறார்கள். இந்தியப் பிரிவினைக் கலவரங்களில் மட்டுமே சுமார் 10 லட்சம் மாண்டிருக்கிறார்கள். கத்தோலிக்கர் பிராடஸ்டன்ட், முஸ்லிம்-கிறித்துவர், ஷியா-சுன்னி போர்கள் பற்றி எழுத ஆரம்பித்தால் நாள் முடிந்து விடும்! )
என்னைப் பொருத்த வரை வன்முறையை எட்டாத வரை ரசிகர்கள் போட்டிகளை எல்லாம் சிரித்துக் கடக்க வேண்டியதுதான். அலகு குத்துகிறானா? குத்திக் கொள்ளட்டும். பால் அபிஷேகம் செய்கிறானா? செய்து கொள்ளட்டும். கோயில் அபிஷேகங்களில் வீணாகும் (!) பாலை விட இதில் அதிகம் வீணாகி விடாது.
நிஜமாகவே நேரம், பணம், உணர்வுகள் இவை அதிகம் வீணாகும் துறை மதம்தான். அங்கு ஆகும் விரயங்கள் குறித்து எந்தச் சலனமும் இல்லாதவர்களுக்கு, குறிப்பாக அந்த விரயத்தை தாங்களே செய்து கொண்டிருப்பவர்களுக்கு திரைக் கலைஞர்களின் ரசிகர்கள் குறித்து விமர்சனம் செய்ய எந்தத் தகுதியும் கிடையாது.
நீங்கள் ஒரு கற்பனைப் பாத்திரத்துக்கு நேரம், பணத்தை வீணடிக்கிறீர்கள். அவர்கள் வேறொரு கற்பனைப் பாத்திரத்துக்கு வீணடிக்கிறார்கள். அவர்களாவது வருடத்துக்கு ஓரிரு நாள்தான் விரயம் செய்கிறார்கள். நீங்கள் தினமுமே செய்கிறீர்கள்.
எனவே ஓவர் சலம்பல் செய்யாமல் கொஞ்சம் சும்மா இருங்கள்.
Hits: 14