Sat. Apr 20th, 2024

மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித் தொகையினை 2022-2023 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு திடீரென இரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின் அவர்கள். மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (7-12-2022) கடிதம் எழுதியுள்ளார்.

29-11-2022 நாளிட்ட ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி. ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்குகிறது என்று தெரிவித்துள்ளதால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், பழங்குடியினர் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி. தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடையவராகிறார்கள் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு. ஏழை சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த குழந்தைகளிடையே தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைவதோடு. 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும் என்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிய அரசு 2008-2009 ஆம் ஆண்டில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்றும். அரசு / அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்குக் குறைவாக இருந்தால் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த இத்திட்டத்தின்கீழ், 2021-2022  ஆம் ஆண்டில் 4,49,559 மாணவர்களுக்கு  ரூபாய் 86.76 கோடி  ஒப்பளிக்கப்பட்டுள்ளது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த முடிவினால், தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் ஐந்து இலட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகையின் பயன்களை பெற இயலாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றும், ஏழை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வி மிகவும் பயனுள்ள கருவியாகும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் பின்தங்கியுள்ளனர் என்பதை பல்வேறு காலக்கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு, இந்த கல்வி உதவித்தொகை ஏழை. பின்தங்கிய மற்றும் பெண் குழந்தைகள் உட்பட, மிகவும் விளிம்புநிலையிலுள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும் உதவிகரமாக இருப்பதால், இது தொடரப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க‌.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.”

Visits: 31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *