Tue. Apr 23rd, 2024

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி வெளியிட்ட அறிக்கை “கன்னியாகுமரி மாவட்ட அரசு இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவட்டாறு பகுதியில் இயங்கிய மணலோடை இரப்பர் தொழிற்கூடம் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நிர்வாகச் சிக்கலாலும் பத்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. பத்மநாபபுரம் பகுதியில் அமைந்திருந்த மைலர் இரப்பர் தொழிற்கூடமும் கடந்த ஓராண்டிற்கு முன்பு மூடப்பட்டது. தற்போது கீரிப்பாறை இரப்பர் தொழிற்கூடமும் மூடப்படலாமென்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இரப்பர் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 16-09-2022 அன்று நடைபெற்றது. அதில் வனத்துறை தொழிலாளர் நலத்துறை நிர்வாக இயக்குநர், ஆணையர், தொழிற் சங்கதலைவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அதன்படி இதுவரையிலும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது கீரிப்பாறை இரப்பர் தொழிற்கூடம் முன்பு அரசு இரப்பர் கழக அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ரூ.40 ஊதிய உயர்வுக் கோரி கடந்த 07-11-2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். அரசு இதில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வு அளித்து இரப்பர் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாத்திட முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.”

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *