Fri. Apr 19th, 2024

தர்மபுரி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை!

ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது!

ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!”

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *