சாதி சமய இன வேறுபாடின்றி அனைவரையும் ஒருசேர அரவணைக்கும் சிவகங்கையின் அரசர்கள், கி.பி. 1780 கி.பி. 1801 வரை ஓர் நல்லாட்சியை கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த அக்டோபர் 24ம் தேதிதான் மிகப்பெரிய உதாரணம். ஏனெனில் இந்நாளில் தான், தங்களது மன்னனுக்காக சாதிமத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்ட குடிமக்கள் தன்னுயிரை தியாகம் செய்த நாள் இன்று. உலக வரலாற்றில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமாயென கூட நினைக்க முடியாத அளவிற்கான நிகழ்வை, பல ஆண்டுகளாக தென்னகத்திலுள்ள சிவகங்கை மண் ஒரு ரத்த சரித்தரித்தை தன்னுள் படிய வைத்திருக்கிறது.
அக்டோபர் 24, 1801 தொடங்கி ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது பாண்டிய சகோதரர்கள்,அவர்களது போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகள், மருது பாண்டியர்களின் ஆண் வாரிசுகளான 10, 12 வயதே நிரம்பியபாலகர்களைத் தூக்கிலிட்ட கொடுமை உலக வரலாற்றில் ஒப்பீடு சொல்லவியலாத நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளை நேரில் கண்ட ஆங்கில ராணுவ அதிகாரி வெல்ஸ், ராணுவச் சட்டப்படி அவற்றைப் பொது வெளியில் தெரிவிக்க இயலவில்லை. எனவே, லண்டன் சென்றபின் ஜே.கோர்லே என்கிற எழுத்தாளர் மூலமாக Mahradu, an Indian Story of the Beginning of the Nineteenth Century: With Some Observations (1813) என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.
சிவகங்கைச் சீமையில் திருப்பத்தூர் மண்ணில் நடைபெற்ற கோரக் கொலைகளை ஆங்கில ராணுவ அதிகாரியாலேயே பொறுக்க முடியவில்லைஎன்றால், எத்தகைய கொடூரமான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கோர்லே 10, 12 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ராணுவ அதிகாரி தெரிவித்த செய்திகளைத் தானே அச்சிட்டு வெளியிட்டுள்ளார் என்றால், இவை குறித்த செய்திகள் வெளிவரக் கூடாது என்பதில் எத்தகைய அச்சுறுத்தலும், அபாயகரமான சூழ்நிலைகளும் நிலவியிருக்க வேண்டும் என்பதை அனுமானிக்கலாம்.
உலகிலேயே முதன்முறையாக தனியோர் அடையாளமாக மருதுபாண்டியர் தலைமையிலான ‘வீரசங்கம்’ என்ற அமைப்பின் மூலம் ‘ஜம்புத்தீவு போர் பிரகடன’த்தை, அன்றைய ஆட்சியாளர்களான ஐரோப்பியர்கள் மறந்திருக்கவே முடியாது. ஆங்கில ஏகாபத்தியத்திற்க்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டு, நேரடியாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் புரிய தமிழகத்தை அன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட அனைத்து தரப்பட்ட மன்னர்களையும், சிற்றரசர்களையும், பாளையககாரர்களையும் ஒன்றுபடுத்தி “வீரசங்கம்” என்ற அமைப்பை உருவாக்கிய சிவகெங்கை சீமையின் மன்னர்கள் மருதுசகோதரர்களை இன்றைக்கு சாதீய பின்புலத்தில் அடையாளப்பட வைத்தது வேதனையான விசயம்.
பழந்தமிழர்களின் போர்க்கருவியான பூமாரங் என்ற வளரி பயன்பாட்டை அன்றைய நாட்களில் போர்களங்களிலும், வேட்டையாடும் களங்களிலும் பயன்படுத்தியவர்களில் மிக கைத்தேர்ந்தவர்களாக மாமன்னர் மருது சகோதரர்கள் மட்டுமே விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும், அவர்களது ஒப்பிடமுடியாத வீரத்தை – கடின உழைப்பை – நாட்டுப்பற்றை – தன்னம்பிக்கையை – இறை பக்தியை – அனைத்துதரப்பட்ட மக்களையும் அரவணைத்து சென்ற ஆளுமையை யாராலும் மறக்கடிக்க முடியாது. உலகிலேயே வெள்ளையர்களால் தனது எதிராளியின் பச்சிளங்குழந்தைகள் உள்பட குடிவழி ஆண் சந்ததியினரையும் ஒருவர் விடாமல் ஒட்டுமொத்தமாக கொன்றொழித்த ஒரே சம்பவம் மருதுசகோதரர்களது விசயத்தில் மட்டுமே நடந்தேறியது என்பதை நினைக்கையில் மாமன்னர் மருதுசகோதரர்களின் வீரத்தையும் ஆளுமையையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
தாங்கள் கட்டிய காளையார்கோவில் கோபுரம் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி 500 க்கும் மேற்பட்ட மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?
இன்றைய காலக்கட்டங்களில் விடுதலைப்புலிகள் உள்பட பல இராணுவ இயக்கங்கள் பயன்படுத்தி வருகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கொரில்லா போர்முறையை மிக நேர்த்தியாக அன்றைக்கே பயன்படுத்தி வெற்றிவாகை சூடிய மாமன்னர் மருதுபாண்டியர்களை வெறும் சாதீய வட்டத்தில் மட்டும் அடைக்க நினைப்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.
உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வீரம் போற்றதக்கது. மதுரை தெப்பக்குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வளரி வந்து சேரும். இதை ஆங்கிலேயரான வெல்ஷ் அவரது குறிப்பில் சொல்லிருக்கிறார்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் – வீரமும் போற்றுதலுக்குரியது.
எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். – இது மாமன்னர் மருதுபாண்டியரின் பிரகடனத்தின் ஒரு பகுதி.
முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!
எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் – தாக்கிவிட்டு மறைதல் – மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் – ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் – தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.
கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மாமன்னர் மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!
தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.
மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.
ஆன்மீகப்பணியில் கிருத்துவம் – இசுலாம் – ஹிந்து என்ற பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களையும் திருப்பணி செய்த மண்ணுரிமை போராளிகளான வெள்ளை மருதுவும் – சின்ன மருதுவும் நாம் போற்றி வணங்க வேண்டிய காவல்தெய்வங்கள் என்பதை நினைவில் கொண்டு எந்நாளும் அவர்களது ஆளுமையையும் வீரத்தையும் விவேகத்தையும் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
Hits: 29