Thu. Apr 25th, 2024

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான (AIQ) ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் ( Open Competition) இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே. அதாவது பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் கழிக்கப்பட மாட்டார்கள். இது இட ஒதுக்கீடு கோட்பாட்டின் அடிச்சுவடி. உச்சநீதிமன்ற தீர்ப்புகள், அரசின் வழி காட்டல்கள் பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட வழி முறை.

ஆனால் மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு அகில இந்திய இடங்களுக்கான அனுமதியில் இந்த கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

ஓ பி சி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்கள் 2169. நிரப்பப்பட்ட ஓ பி சி இடங்களோ ஆறு மட்டுமே.

பொதுப் போட்டியில் தேர்வான 2163 ஓ.பி.சி மாணவர் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு அனுமதியாக கணக்கு வைக்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் மாண்புமிகு மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட மொத்த மருத்துவ இளங்கலைப் பட்ட காலியிடங்கள் எவ்வளவு? ஓ. பி. சி. எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன?

பொதுப் போட்டியில் தேர்வான ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன? ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு வாயிலாக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் (பொதுப் போட்டியில் இடம் பெற்ற இப்பிரிவினர் நீங்கலாக) பிரிவு வாரி எவ்வளவு?

பொதுப் போட்டியின் வாயிலாக அனுமதி பெற்ற ஓ.பி.சி. எஸ்.சி. எஸ்.டி மாணவர்கள், ஓ.பி.சி.எஸ்.சி. எஸ்.டி இட ஒதுக்கீடு எண்ணிக்கை கணக்கிலும் சேர்க்கப்பட்டு உள்ளனரா? ஆம் எனில் எத்தனை?

முழு விவரங்களை வெளியிடுமாறு கோரியுள்ளேன். இட ஒதுக்கீடு மீறல் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட ஓ. பி. சி மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எஸ்.சி. எஸ்.டி மாணவர் அனுமதியிலும் இக்கோட்பாடு மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மருத்துவக் கல்வி அனுமதிகளில் ஓ. பி. சி இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டு போராடி நீதிமன்றங்களில் வாதாடி பெறப்பட்ட ஒன்று. அதில் தமிழகம் முன்னின்றது. ஆனால் இன்றும் அதை சிதைக்கிற முயற்சிகள் தொடர்கின்றன.

இதை அனுமதிக்க இயலாது.”

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *