Mon. Oct 2nd, 2023

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர், A.G.மௌரியா, I.P.S., (ஓய்வு), அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பொதுமக்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் நீதி மய்யம் ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வருகிறது. தலைவர் கமல்ஹாசன் அவர்கள் களத்தில் இறங்கிப் போராடியதோடு அரசியல் மேடைகளில் இப்படுகொலை குறித்து தொடர்ந்து கண்டித்துப் பேசியுள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தியது.

இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தை ஒடுக்க, திட்டமிட்டப் படுகொலை அரங்கேறியது இந்த விசாரணை அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பட்டமாக விதிமீறல் நடந்துள்ளது. முட்டிக்கு கீழே சுட வேண்டிய போலீஸார், எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல், கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளனர். இறந்தவர்களின் தலை, முதுகு, மார்புப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

நியாயமான முறையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமானவர்கள் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளவர்கள் மீது பாரபட்சமின்றி, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.”

Hits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *