Thu. Dec 1st, 2022

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது . நாடறியப்பட்ட சனநாயக அமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் வீரியமிக்கச் செயல்பாடுகளை முடக்குவதற்காகத் தொடுக்கப்பட்டுள்ள இக்கொடும் அடக்குமுறை நடவடிக்கையானது பாசிசப்போக்கின் உச்சமாகும் .

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாடு முழுமைக்கும் இசுலாமிய மக்கள் மத ஒதுக்கலுக்கும் , கொடுந்தாக்குதல்களுக்கும் , உரிமைப் பறிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகிற வேளையில் , இசுலாமிய மக்களின் உரிமைகளுக்காகவும் , பாதுகாப்பான நலவாழ்வுக்காகவும் பாடுபடுகிற வலிமைவாய்ந்த இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையானது நாடெங்கிலும் வாழும் இசுலாமிய மக்களிடையே உள்ளக்குமுறலையும் , ஆற்றாமையையும் ஏற்படுத்தியிருக்கிறது . நாட்டையும் , மக்களையும் மதத்தால் துண்டாடி , வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டி , பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் மக்களின் வாக்குகளை வேட்டையாடி , ஆட்சியதிகாரத்தை அடைந்து , இந்தியாவை இந்துராஷ்டிராவாக மாற்ற முனையும் பாஜக , ஆர்.எஸ்.எஸ் . போன்ற இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு எவ்விதத் தடையுமில்லாத நாட்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற மக்கள் இயக்கங்களுக்குத் தடைவிதிக்கப்படுவது இந்நாட்டின் சனநாயகத்தையும் , மதச்சார்பின்மையையும் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும் .

ஆகவே , இத்தடை நடவடிக்கை என்பது பாஜக அரசின் இசுலாமிய வெறுப்பினாலும் , அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையேயாகும் . இதற்கு எனது கடும் கண்டனத்தையும் , வன்மையான எதிர்ப்புணர்வையும் பதிவு செய்வதோடு , பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கம் சட்டத்தின் உதவியோடு தடையைத் தகர்த்து மீண்டுவர துணைநிற்போமென உறுதியளிக்கிறேன் .”

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.