Thu. Mar 28th, 2024

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக ஆந்திர எல்லையிலுள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக 2 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கப் போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும் .

இதற்காக ரூ .120 கோடி நிதி ஒதுக்கப் போவதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது பெரும் கவலையளிக்கிறது . பல மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதியில் ஒரு மாநில அரசு தன்னிச்சையாக புதிய அணையைக் கட்டுவதும் , ஏற்கனவே உள்ள அணையின் கொள்ளளவை அதிகரிப்பதும் சட்டப்படி தவறானதாகும் .

2016 ஆம் ஆண்டு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் இத்தகைய முயற்சியை ஆந்திர அரசு மேற்கொண்டது . அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அம்மா அவர்கள் ஆந்திர அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்கள் . அதே திட்டத்தைதான் தற்போது ஆந்திரா மீண்டும் கையில் எடுத்துள்ளது .

ஏனெனில் , தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் அண்டை மாநிலங்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது . நதி நீர் பிரச்னைகளில் நமக்குரிய உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் அதனைப் பறிகொடுப்பதே தி.மு.க ஆட்சி காலங்களின் வரலாறு .

கருணாநிதி ஆட்சியைப் பின்பற்றி ஸ்டாலின் ஆட்சியிலும் அதுதான் நடக்கிறது . காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ரூ . 1000 கோடியை ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்டது . 124 ஆண்டுகளாக தமிழகத்திடமிருந்த முல்லைப் பெரியாறில் தண்ணீர் திறந்துவிடும் உரிமையைக் கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது ஸ்டாலின் அரசு .

இப்போது புல்லூர் அணைக்கட்டின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டால் மழை , வெள்ள காலங்களில் பாலாற்றில் வரும் தண்ணீரின் அளவும் குறைந்து போய்விடும் . பாலாற்றுப் படுகை விவசாயம் மட்டுமன்றி சென்னை , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதி மக்கள் குடிநீருக்காகவும் பாலாற்றைதான் நம்பியிருக்கின்றனர் . எனவே , உடனடியாக ஆந்திர அரசின் இம்முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் .

அரசியல் ரீதியான அழுத்தங்கள் மட்டுமின்றி 2016 ல் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் தி.மு.க அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் .”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *