Sat. Nov 26th, 2022

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ ப்ளூ ‘ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் , புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க அரசை வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன் . ஆனால் , மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும் , அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார் .

இருப்பினும் , கள நிலைமை வேறுவிதமாகத்தான் இருக்கிறது . ‘ ப்ளூ ‘ காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன . மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது , யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சொன்னாலும் , அண்மைக் காலமாக காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை , குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது . இது மட்டுமல்லாமல் , சென்னை மாநகராட்சியும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தியுள்ளன . நேற்று 100 இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்ஃபுளுவென்சா எனப்படும் ‘ ப்ளூ ‘ தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது . பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 25 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் ‘ ப்ளூ ’ காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன .

அதாவது கொரோனா தொற்று அறிகுறிகளும் , ‘ ப்ளூ ‘ , ‘ டெங்கு ‘ காய்ச்சலுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் , கடுமையான அறிகுறிகளுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் , வருங்காலங்களில் தற்போதுள்ள காய்ச்சல் முகாம்கள் , நோய்த் தொற்று எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு மாற்றப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . கள நிலைமை இவ்வாறிருக்க , மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது .

இதேபோன்று , ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருந்தது போல் தமிழ்நாட்டிலும் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வருகின்றன . தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டாலும் , மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண்ணை அரசு அறிமுகம் செய்திருப்பதாக கூறுகிறார் . இதிலிருந்தே மருந்து தட்டுப்பாடு நிலவுவது என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு இருக்கிறது .

இது மட்டுமல்லாமல் , அகில இந்திய அளவிலும் சரி , தமிழ்நாட்டு அளவிலும் சரி கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது . இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது . தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் , 20-09-2022 அன்று 496 ஆக இருந்த தினசரி பாதிப்பு 21-09-2022 அன்று 509 ஆகவும் , 22-09-2022 அன்று 522 ஆகவும் , 23-09-2002 அன்று 529 ஆகவும் உயர்ந்து கொண்டே செல்கிறது . இது தவிர , 23-09-2022 அன்று இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன .

எனவே , மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி , அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும் , ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல் , ப்ளூ காய்ச்சல் , பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணமும் , யதார்த்தமான கள நிலவரத்திற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் .”

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.