Thu. Dec 1st, 2022

மக்கள் நீதி மய்யம், துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நீட் தேர்வு தோல்வி பயத்தால் தமிழகத்தில் மாணவ , மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன . இனியும் இதுபோன்ற வேதனைகள் தொடராமல் இருக்க , அநீதியான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது .

இளநிலை மருத்துவம் பயில்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன . தமிழகத்தைச் சேர்ந்த 1.32 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் . 2020 – ல் 57.44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் , 2021 – ல் 54.40 சதவீதமாகவும் , நடப்பாண்டு 51.30 சதவீதமாகவும் குறைந்துவிட்டது . அதுமட்டுமின்றி , நடப்பாண்டு தேசிய தர வரிசையில் முதல் 50 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர் .

கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று தமிழக அரசு மார்தட்டிக் கொள்கிறது . ஆனால் , நீட் தேர்ச்சி விகிதத்தில் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைவாகும் . இத்தேர்வில் தேசிய அளவில் 56.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் , தமிழகத்தில் 51.30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் . உத்தரப் பிரதேசம் , மகாராஷ்டிரா , ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றன .

நீட் தோல்வி காரணமாக சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் . மாணவியின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது . அதேபோல , திருவள்ளூர் மாவட்டம் வேலஞ்சேரியைச் சேர்ந்த மாணவி ஜெயசுதா ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் . அரியலூர் அனிதாவில் தொடங்கிய நீட் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதது வேதனையளிக்கிறது .

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை . மத்திய அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை . நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து , ஆட்சியைப் பிடித்த திமுக அரசு , தற்கொலைகள் தொடர்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது .

தனியார் மையங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி பெறும் மாணவ , மாணவிகள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிட்டது .

நீட் என்கிற அநீதியான தேர்வு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல , இந்தியாவில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை மட்டுமல்ல , மக்களின் அனைவரின் விருப்பமுமாகும் . எனவே , நீட் தேர்வுக்கான எதிர்ப்புக் குரலை தமிழக அரசு இன்னும் வலுவாக்க வேண்டும் . மத்திய அரசும் இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து , நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய முன்வர வேண்டும் .

அதேசமயம் , இடைக்காலத் தீர்வாக , தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு , தரமான பயிற்சி மையங்களை தமிழக அரசே நடத்த வேண்டும் . அல்லது , தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில நிதியுதவி வழங்க வேண்டும் .

காரைக்காலில் தனது மகளுக்குப் போட்டியாக இருந்த 8 – ம் வகுப்பு மாணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார் ஒரு தாய் . மதிப்பெண்ணை மட்டுமே முன்னிறுத்தும் நமது கல்வி முறையின் தோல்வியே இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் . எனவேதான் , பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் , தற்போதைய சூழலுக்கேற்ற மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது .

குறிப்பாக , அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும் . நடப்பாண்டு 17 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் , 80 சதவீதம் பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர் . தமிழக மாணவர்கள் முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்க வேண்டியதும் , தரமான பயிற்சி பெறுவதும் அவசியம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர் .

எனவே , நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசும் , பிற அரசியல் கட்சிகளும் கடுமையாகப் போராட வேண்டும் . அதேசமயம் , நீட் தேர்வு நடைபெறும்வரை , அதில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்று , மருத்துவராகும் வாய்ப்பைப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது . “

Hits: 1

Leave a Reply

Your email address will not be published.