Thu. Oct 6th, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி ” அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே ! உங்கள் யாவருக்கும் . என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் !

ஒரு சிறந்த நாடு , எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் .

” தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு ” – என்கிறார் .

இக்குறட்பாவிலுள்ள ‘ தக்கார் ‘ என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர் . ஆனால் ‘ தக்கார் ‘ என்று சுட்டப் பெறுவோர் ” ஆசிரியர் ” என்று பொருள் காண நான் விழைகின்றேன் . ஏனெனில் , தமக்குரிய நெறியிலிருந்து வழுவாது , பிறழாது தாமும் வாழ்ந்து , வளரும் இளம் தலைமுறையினரையும் அந்நெறிப்படி வாழக் கற்றுக் கொடுக்கும் பொறுப்புமிக்கவர்களாக இருப்பவர் ஆசிரியர்களே .

மனிதர்களை – மதிவாணர்களாக்குவதும் . மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான் .

காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்விச் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே !

அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவும் , பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கவும் , அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி முழுமையாகத் தொடரவும் , குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை உறுதி செய்யவும் . ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சிகளை அளித்து அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-2023 – ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ .36,895.89 கோடியை ஒதுக்கியுள்ளது .

கொரோனா பெருந்தொற்றினால் மாணவர்களிடையே உருவான கற்றல் இழப்புகளை ஈடு செய்ய , 1 முதல் 8 – ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே 2 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு , அக்டோபர் 2021 முதல் ” இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை ” அரசு செயல்படுத்தி வருகின்றது . இத்திட்டத்திற்கென சுமார் ரூ .163 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது .

மேலும் , 9 முதல் 12 – ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் ” நான் முதல்வன் ” என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

இதுமட்டுமல்லாமல் , எதிர்வரும் 2025 – ஆம் ஆண்டிற்குள் , 1 முதல் 3 – ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் வாசித்தல் , எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறும் நோக்கோடு . 2021-22 – ஆம் ஆண்டில் ” எண்ணும் எழுத்தும் இயக்கம் ” தொடங்கப்பட்டு , பல்வேறு செயல்பாடுகளுக்கென ரூ .66.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் , 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் , மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ .25,000 / – ரொக்கம் , கேடயம் மற்றும் சான்றிதழுடன் ” கவிமணி விருது ” வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

பள்ளி மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழித் திறனறித் தேர்வு நடத்தி , ஆண்டு தோறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு , இரண்டாண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது .

கல்வியாளர்கள் , ஆராய்ச்சியாளர்கள் . எழுத்தாளர்கள் , பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் , மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வண்ணம் மதுரையில் ” முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் ” அமையவுள்ளது .

நாட்டின் எதிர்காலச் சொத்துக்களாம் இளைய தலைமுறையை , நன்முத்துக்களாக உருவாக்கம் பெரும் பொறுப்புக்குச் சொந்தக்காரர்களாகிய ஆசிரியப் பேரினத்தை அரசும் , நாட்டோரும் , நல்லோரும் மதித்துப் போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம் .

வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ! “

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.