Thu. Oct 6th, 2022

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை சீரமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் 77 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் எவ்வித பணிகளும் தொடங்கப்படவில்லை.பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசிடம் துறைமுகத்தை சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

இச்சூழலில், பூத்துறை ஊரை சேர்ந்த மீனவரும் சகோதரருமான சைமன் 11.08.2022 அன்று, தேங்காய்ப்பட்டணம் துறைமுக நுழைவாயில் அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு பெரும் துயரமளிக்கிறது.

தேங்காய்ப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் உரிய திட்டமிடலின்றி கட்டப்பட்டுள்ளதால்,கடல் அலைகளில் சிக்கி மீனவ சகோதரர்கள் உயிரிழக்கும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனைக்குரியது.
இந்த மீன்பிடி துறைமுகத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, நூற்றுக்கணக்கான விசைப்படகுகளும் சிக்குண்டு மிக மோசமான நிலையில் பழுதடைவதும், வலை உள்ளிட்ட அனைத்து மீன்பிடி உபகரணங்களையும் மீனவர்கள் இழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

எனவே, தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீர்செய்து மீனவ சகோதரர்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும். உயரிழந்த சகோதரர் சைமன் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 இலட்சம் ரூபாயும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்க வேண்டும். “

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.