Sat. Sep 24th, 2022

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட செய்தி ” மலிவான விமானப் பயணங்கள் எல்லாம் உலகமய பொருளாதாரப் பாதையின் பயன் என்று ஆட்சியாளர்கள் பேசிய காலம் உண்டு . இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது .

இது குறித்த கேள்வி ஒன்றை நாடாளுமன்றத்தில் நான் எழுப்பி இருந்தேன் .

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விமானக் கட்டணங்கள் 20 சதவீதம் உயர்ந்துள்ளது . ஓராண்டில் பிரபலமான தடங்களில் 50 சதவீதம் கட்டணங்கள் உயர்ந்துள்ளன . இதை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா ? கட்டணங்களை கட்டுப்படுத்த அரசிடம் ஏதாவது அதிகாரம் தக்க வைக்கப்பட்டுள்ளதா ? அரசின் கைகளில் இருந்த ஒரே விமான நிறுவனமான ஏர் இந்தியா , டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டதால் அரசிடம் இருந்த விலைக் கடிவாளம் கை நழுவிப் போய் விட்டதா ? மலிவு விமானப் பயணத்தை உறுதி செய்ய அரசின் தலையீடுகள் என்ன ? என்ற கேள்விகளை எழுப்பி இருந்தேன் .

உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் ( ஓய்வு ) வி.கே.சிங் இதற்கு பதில் அளித்துள்ளார் .

விமானக் கட்டணங்களை அரசு நிர்ணயிப்பதும் இல்லை . கட்டுப்படுத்துவதும் இல்லை . 1937 விமானங்கள் சட்டம் பிரிவு 135 உட்பிரிவு 1 இன் படி ஒவ்வொரு விமான நிறுவனமும் செலவினம் , சேவையின் தன்மை , நியாயமான லாபம் , நடப்பில் உள்ள கட்டண அமைப்புகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் . ஆகவே நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்கிற சுதந்திரம் விமான நிறுவனங்களுக்கு பிரிவு 135 உட்பிரிவு 1 படி உண்டு . இருந்தாலும் அசாதாரண கோவிட் சூழலை கணக்கில் கொண்டு சட்டத்தின் பிரிவு 8 B யைப் பயன்படுத்தி அரசாணை எண் 02.20 / 21.05.2020 மூலம் உச்ச பட்ச , கீழ் வரம்பு கட்டணங்கள் தற்காலிகமாக வரைமுறை செய்யப்பட்டன . இந்த விலை கட்டண அமைப்பு காலத்திற்கேற்ப , விமான எரிபொருள் விலை உயர்வுகளையும் கணக்கில் கொண்டு , மாற்றங்களுக்கும் ஆளாகியது . 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விலை உச்சவரம்பை இப்போதும் நிர்ணயித்து பயணிகளின் நலனை பாதுகாக்கிறோம் . ஏர் இந்தியா ஜனவரி 2022 இல் தான் விற்கப்பட்டது . ஆனால் விலை உச்சவரம்பு மே 2020 இல் இருந்து அமலில் உள்ளது .

2016 இல் இருந்து உடான் ( UDAN ) திட்டம் மூலம் அதிக போக்கு வரத்து இல்லாத பிராந்திய விமான தளங்களின் இணைப்பை வலுப்படுத்தி வருகிறோம் .

என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார் .

அரசுக்கு கடிவாளம் கைகளில் இல்லை என்பதே இந்த பதிலின் சாரம் . மலிவு விலை விமானப் பயணங்கள் பொருளாதார சீர் திருத்தங்களின் வெற்றி என்று தம்பட்டம் அடித்த அரசாங்கம் இரண்டு மாதங்களில் 20 சதவீதம் உயர்வு , ஓராண்டில் 50 சதவீதம் உயர்வு ஏன் என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை . “

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.