மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ . பி . சி , எஸ்.சி , எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் ? மொத்தம் எவ்வளவு பேர் விண்ணப்பித்தார்கள் ? இட ஒதுக்கீடு பிரிவினருக்கான இடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன ? என்ற கேள்வியை சு . வெங்கடேசன் எழுப்பினார் .
” அதற்கான 29 பக்கங்கள் கொண்ட பதிலை ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ளார் .
அதில் தரப்பட்டுள்ள தகவல்கள் எப்படி முனைவர் பட்ட அனுமதிகள் எஸ்.சி , எஸ்.டி , ஓ.பி.சி பிரிவினருக்கு அநீதியை இழைக்கின்றன என்பதை விவரிக்கிறது . இட ஒதுக்கீடு அடியோடு சிதைக்கப்பட்டுள்ளது . போதுமான விண்ணப்பதாரர்கள் இருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது . வழக்கமாக அரசு சொல்லும் காரணமும் இங்கே அடிபட்டு போயிருக்கிறது .
இட ஒதுக்கீடு நெறிகளின்படி ஐ.ஐ.டி க்கள் எஸ்.டி 7.5 சதவீதம் , எஸ்.சி 15 சதவீதம் , ஓ.பி.சி 27 சதவீதம் இடங்களை தந்திருக்க வேண்டும் .
அமைச்சர் தந்துள்ள தகவல்களின்படி எஸ்.டி பிரதிநிதித்துவம் 2.5 சதவீதமாகவே இருக்கிறது . 3430 விண்ணப்பதாரர்கள் இருந்தும் எல்லா ஐ.ஐ.டி களிலும் சேர்த்து மொத்தம் 137 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது . எந்த ஐ.ஐ டி யுமே உரிய பிரதிநிதித்துவத்தை தரவில்லை . மூன்று ஐ.ஐ.டி க்கள் ( கோவா , பிலாய் , திருப்பதி ) முறையே 30 , 31,93 விண்ணப்பங்களை வரப் பெற்றும் அவர்கள் அனுமதி தந்தது ஜீரோ சதவீதம் .
எஸ்.சி பிரதிநிதித்துவம் 10 சதவீதமாகவே இருக்கிறது . 17075 விண்ணப்பதாரர்கள் இருந்தும் எல்லா ஐ.ஐ.டி களிலும் சேர்த்து மொத்தம் 574 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது . எல்லா ஐ.ஐ.டி களுமே – கோவா , தன்பாத் தவிர – உரிய எஸ்.சி பிரதிநிதித்துவத்தை தரவில்லை .
சென்னை ஐ.ஐ.டியில் எஸ்.சி , எஸ்.டி பிரதிநிதித்துவம் முனைவர் பட்ட அனுமதிகளில் மிக மிகக் குறைவாக உள்ளது . மொத்தம் 558 மாணவர்கள் முனைவர் பட்ட அனுமதிகளை பெற்றுள்ள நிலையில் 53 மாணவர்கள் மட்டுமே ( 9.5 சதவீதம் ) எஸ்.சி பிரிவை சார்ந்தவர்கள் . 20 பேர் மட்டுமே ( 3.6 சதவீதம் ) எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள் , ஆனால் எஸ்.சி மாணவர்கள் 1637 பேரும் , எஸ்.டி மாணவர்கள் 346 பேரும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களாக இருந்துள்ளனர் . எஸ்.சி மாணவர் இடங்கள் 23 , எஸ்.டி மாணவர் இடங்கள் 13 காலியாக விடப்பட்டுள்ளன .
கல்வி நிறுவன நிதியில் இருந்து நடத்தப்படும் பிரிவுகள் மட்டுமின்றி திட்டம் / வெளி ஆதரவு நிதி மூலம் நடத்தப்படும் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு அமலாகவில்லை .
ஓ.பி.சி இட ஒதுக்கீடும் ஓரளவே தரப்பட்டுள்ளது . இதில் சென்னை ஐ.ஐ டி மட்டுமே விதி விலக்காக உள்ளது .
இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான குறைந்த பட்ச சதவீதமே ஆகும் . அதை எட்டவே இந்த பாடு . சட்டம் வந்து 16 ஆண்டுகள் கழித்தும் இதுவே நிலைமை .
மத்திய கல்வி நிறுவனங்கள் ( மாணவர் அனுமதி இடஒதுக்கீடு ) சட்டம் 2006 இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்ட ஆண்டு எண்ணிக்கையில் ( Annual Permitted Strength ) உறுதி செய்ய வேண்டும் என கட்டளை இடுகிறது . ஆனால் ஐ.ஐ.டி கள் அரசியலமைப்பு சட்டத்தை விட ” மனு தர்மத்தையே ” மதிக்கிறது போல . ஆகவே அனுமதிக்கப்பட்ட ஆண்டு எண்ணிக்கையை ( Annual Permitted Strength ) எந்த நெறிகளுக்கும் உட்படாமல் நிர்ணயித்து கொள்கின்றன . இதன் மூலம் இட ஒதுக்கீட்டை நீர்க்க செய்கிறார்கள் . ஐ.ஐ.டி கோரக்பூர் கல்வி நிறுவன நிதியில் நடத்தப்படும் பிரிவுகளுக்கு ( Institute funded ) ” நிலையான அனுமதி எண்ணிக்கையையே ” ( Fixed Annual Strength ) வைத்திருப்பது மீறலின் உச்சம் ஆகும் .
” உயர்ந்த ” கல்வி நிறுவனங்கள் என்று தங்களை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஐ ஐ.டி களின் சமூக நீதி குறித்த பார்வையும் , அக்கறையும் தரை மட்டத்தில் உள்ளன . அனுமதி முறைமையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையீடு செய்யக் கூட முடியவில்லை .
அரசு சட்டத்தின் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும் . நேர்மையான ஆய்வை , விசாரணையை செய்து மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று சு.வெங்கடேசன் எம் பி கோரியுள்ளார் .
Hits: 3