தோழர் கருணா சக்தி அவர்களின் விமர்சனம்
Gargi புத்திசாலித்தனமான திரைப்படம். கதைக்கு வெளியே நிற்கும் பார்வையாளர்களை இதன் அற்புதமான திரைக்கதை சிறுகச்சிறுக கார்கியின் மனநிலைக்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. அதற்காக, கார்கியின் உலகம், கோர்ட் விசாரணை காட்சிகள் என அனைத்தும் திரைக்கதையில் அற்புதமாக அடுக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த ஜனகனமண திரைப்படம் இதே லாவகத்தை வேறொரு முறையில் கையாண்டது குறிப்பிடத்தக்கது.
Benefit of doubt என்கிற இடத்திற்கும், உண்மையே நீதி என்கிற இடத்திற்கும் இடையில் அடுக்கப்படும் கார்கியின் காட்சி கட்டுமானங்கள் பிரமாதமானது.
சமூக குரூரத்தின் ஒரு அங்கமான குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறை என்கிற மையப் புள்ளியின் மீது நின்று நிகழும் கார்கியின் கதையாடல் திரைக்கதையை இன்னும் பரபரப்புக்குள்ளாக்குகிறது. கத்தி மீது நின்று கையாளப்பட வேண்டிய கதை அவ்வாறே மிகக்கூராக எழுப்பப் பட்டிருக்கிறது.
‘குற்றவாளி என நம்பப்படுகிறவர் இரு பெண் குழந்தைகளின் அப்பா. அவர் அப்படி செய்வாரா?’ என்கிற பொது கருத்துருவாக்கத்தின் அடிப்படையை படம் ஆராய்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட தந்தையின் மகளான கார்கிக்கு அவள் அப்பா பற்றி வழங்கப்பட்ட பிம்பம் ஒருசேர பார்வையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
பிறகு, நாமும்,கார்க்கியும் ஒன்றாக விசாரணையை மேற்கொள்கிறோம். கார்கியை போல அலைவுறுகிறோம், கார்கியிடம் இருக்குமந்த அப்பாவின் பிம்பத்தில் கனிவு கொள்கிறோம். கார்க்கியை காப்பாற்றிய அவரது வீரத்தை கொண்டாடுகிறோம். அதேசமயம், அறத்தின் பக்கம் நிற்கும் கார்க்கியின் முடிவை அங்கீகரிக்கிறோம்.
ஒன்றின் சில பிரத்தியேகமான காரணங்கள், மற்றொரு நிகழ்விற்கு அடிப்படைக் தகுதிகளாக அமைந்து விட முடியாது. ஒன்றைப்போல மற்றொன்று இருப்பதில்லை என்பதாக நீண்ட உரையாடலை நடத்தி முடியும் இத்திரைப்படம் சமூகத்திற்கு முக்கியமானது மற்றும் வரவேற்கப்பட வேண்டியது.
அதைத்தாண்டி, இந்திய திரைப்பட வரலாற்றில் முதன்முதலாக ஒரு திருநங்கை நீதிபதியை நாம் இதில் காண்கிறோம். திரைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் மட்டம் தட்டப்படுகிறார்.
உள்ளே, அரசுத்தரப்பு வக்கீல் கவிதாலயா கிருஷ்ணன் “அவர் நார்மலான நீதிபதி இல்லை” என அவர் உறுதியை சிதைக்கிறார்.
திரைக்கு வெளியே பார்வையாளர்களாக இருக்கும் சிலர் அவரை நையாண்டி செய்கிறார்கள். பிறகடுத்த காட்சியில் “நார்மலாக இல்லை” என்கிற கேலியை பல சமயங்களில் கேட்டு,கடந்துதான் இங்கே வந்திருக்கிறேன். இவைகள் என் உறுதியை ஒரு போதும் குலைக்காது” என இரண்டு தரப்பிற்கும் சேர்த்தே அந்த திருநங்கை நீதிபதி பதிலளிக்கிறார். சமீபத்தில் பல முற்போக்கு திரைப்படங்களின் வழியே திரையில் நிகழ்த்தப்பட்ட பல முக்கியமான/அற்புதமான தருணங்களில் இந்தக்காட்சியும் ஒன்று. பாராட்டுதலுக்குரியது.
இந்த முக்கியமான திரைப்படத்திற்கு கதை மாந்தர்களாக இருந்து கவனிக்கத்தக்க பங்கை வழங்கியிருக்கும் சாய் பல்லவி, காளி வெங்கட், சரவணனன் மற்றும் இதன் இயக்குனர் என அனைவரின் பங்களிப்பும் பாராட்டுதலுக்குரியது. கார்கி அவசியம் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு.
கார்கி
2022
Hits: 13