நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377இன் கீழ், திருநங்கைகளையும், தன்பால் ஈர்ப்பினர்களையும் அங்கீகரிக்க, “பெண்கள்” என்கிற வரையறையை விரிவுப்படுத்தவேண்டும் எனும் கோரிக்கையினை திமுகவை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி அவர்கள் வலியுறுத்தியுள்ளார் . அதன் விவரம் வருமாறு:-
“உலகளவில், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூக உறுப்பினர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிருகத்தனமான பாகுபாட்டிற்கு உள்ளாகியுள்ளனர்.
சமீபத்தில், இந்தியாவில் பள்ளி மாணவியின் பாலியல் அடையாளத்தை கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதுபோலான கொலைகள் நிறுவனக் கொலை வழக்குகளாகப் பார்க்கப்பட வேண்டும்.
இந்த யதார்த்தத்தைக் கருத்தில்கொண்டு, இத்தகைய வன்முறைப் பாகுபாடுகளுக்கு எதிராக, ஒன்றிய அரசு சட்டங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக, மேற்படி நபர்களின் உரிமைகளைக் குறைக்கும் 3 முக்கியமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021, உதவி இனப்பெருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த 3 சட்டங்களில் மேற்படி சமூகத்தினருக்கு எதிரான பிரிவுகளைத் திரும்பப் பெறுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
தற்போது வாடகைத் தாய்க்கு, ‘ஹீட்டோ-செக்சுவல் தம்பதிகள்’ மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தச் சட்டத்தின்கீழ், குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையை மேற்கண்ட சமூகத்தினர் மற்றும் தனிநபர்கள் அல்லது தம்பதிகளுக்கும் கொடுக்கவேண்டும் என்று நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
மேலும், உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம், 2021ன் கீழ், மேற்படி சமூகத்தினர் மற்றும் தம்பதிகள் ஏ.ஆர்.டி. சிகிச்சையைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக மாற்றுமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கருக்கலைப்புக்கான அணுகல் தேவைப்படக்கூடிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை உள்ளடக்குவதற்கு “பெண்கள்” என்ற வரையறையை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்றும், மேற்படி சமூகத்தினரில் மூத்த நபர்களுக்கான பராமரிப்பு, பொது இடங்களில் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.”
Hits: 3