Thu. Apr 25th, 2024

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே . பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது . ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியின் விகிதத்தை கடுமையாக உயர்த்தியதோடு , பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை புதிதாக ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது . இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர் .

அண்மையில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் இனிமேல் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஒன்றிய அரசின் இத்தகைய முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதோடு , அரிசி , கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவிற்கு ரூ 3 முதல் ரூ 5 வரையிலும் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே பணவீக்கத்தாலும் , கடுமையான விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலையும் உருவாகியுள்ளது .

ஒன்றிய அரசின் இத்தகைய மோசமான முடிவை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரிசி ஆலைகள் . மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளதோடு . தமிழகம் முழுவதும் 4000 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன . தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா , கர்நாடகா , கேரளா , தெலுங்கானா , சத்தீஷ்கர் , மேற்குவங்காளம் , உத்திர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறுகின்றன .

ஒன்றிய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு , அரிசி , கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் . அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது .”

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *