Thu. Apr 18th, 2024

சிபிஐ ( எம் ) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் , அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 13.331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன . இப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7500. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 10.000 . முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 12,000 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது .

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர் . இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது . கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர் நியமனம் நடைபெற்றுள்ளது . குறிப்பாக கடந்த 2012-13 கல்வி ஆண்டிற்குப் பிறகு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்தே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதை அதிமுக அரசு புறக்கணித்து வந்துள்ளதை தெரிந்துகொள்ள முடியும் , கடந்த 10 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நியமனம் இல்லாததால் வேதனையில் இருந்த இளைஞர்கள் . திமுக அரசு இந்த காலி பணியிடங்களை நிரப்பும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது , கொரோனா பேரிடருக்குப் பின்னால் தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர் . இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . எனவே . அரசுப் பள்ளிகளில் கூடுதலான ஆசிரியர்களை நியமிப்பது , அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது .

மாணவர்களின் நலன் கருதி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாக தமிழக அரசு தெரிவிக்கிறது . ஆனால் , மீண்டும் மீண்டும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமான வகையில் பாதிக்கப்படும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது . ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று பல்லாயிரக்கணக்கானோர் பணிநியமனத்திற்காக காத்திருக்கின்றனர் . அவர்களை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் உடனடியாக நியமிக்க முடியும் .

அது போல முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப முடியும் . எனவே . தற்போது தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறது .

மேலும் , அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறது .”

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *