Thu. Mar 28th, 2024

பாமக முன்னாள் தலைவர் Dr.S.ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆன்லைன் கடன் செயலி மூலம் வாங்கிய ரூ.5000 கடனை செலுத்த தாமதம் ஆனதற்காக, அதன் நிர்வாகம் அருவருக்கத்தக்க வகையில் அவமதித்ததால் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பாண்டியன் என்ற பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது!

ஆன்லைன் சூதாட்டங்களைப் போலவே கடன் செயலிகளும் தற்கொலைக் கருவிகளாக மாறி வருகின்றன. அவற்றை இயக்குவது யார் என்பதே தெரியாது. சில ஆயிரக்கணக்கில் கடன் வழங்கும் கடன் செயலிகள், அந்தப் பணத்திற்கு பல்லாயிரக்கணக்கில் கொடூரமாக வட்டி வசூலிக்கின்றன!

குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால், கடன் பெற்றவரையும், அவரது குடும்பத்து பெண்களின் படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் -அப் மூலம் செயலிகள் பரப்புகின்றன. இதனால் அவமானம் அடையும் கடன்தாரர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகிறது!

கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கிறது; காவல்துறையும் எச்சரிக்கிறது. ஆனால், அவற்றை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றன. அதன் விளைவாக ஆன்லைன் கடன் செயலிகள் புற்றீசல் போல பெருகி விட்டன!

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைப் போலவே, கடன் செயலி தற்கொலைகளும் பெருக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது. எனவே, ஆன்லைன் கடன் செயலிகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்!” என கூறியுள்ளார்.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *