Mon. Dec 4th, 2023

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தென்தமிழகத்தின் முதல் அருங்காட்சியகமும் முதல் புத்தகக்கடைகளும் உருவான இடம் மதுரை புதுமண்டபம் .

1800 களின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது . இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழா நிகழ்வினை ” காவல்கோட்டம் ” நாவலில் விரிவாக எழுதியுள்ளேன் .

பழங்காலத்தில் ஓலைகளில் தயாரான ஏடுகள் புத்தகங்களாக மாறி அந்த புத்தகங்களை விற்க புதியவகைக் கடைகள் , ” புத்தகக்கடைகள் ” என்ற பெயரில் உருவாயின . அப்படிப்பட்ட கடைகள் முதன்முதலில் உருவான இடம் மதுரை புதுமண்டபம்.

1800 களின் இறுதிப் பத்தாண்டில் இராமநாதபுரத்திலிருந்து மதுரை வந்து தங்கியிருந்த திரு . பாண்டித்துரைதேவர் அவர்கள் கம்பராமாயணத்தையும் திருக்குறளையும் படிப்பதற்காக நண்பர்களிடம் கேட்டுள்ளார் , ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை . இறுதியில் புதுமண்டபத்திலுள்ள புத்தகக் கடைகளிலிருந்து இரண்டு பத்தகத்தையும் விலைக்கு வாங்கியுள்ளார் .

கம்பராமாயணமும் திருக்குறஞம் மதுரையில் கிடைப்பதே இவ்வளவு கடினமாகிவிட்டதே என்ற நிலைதான் நான்காம் தமிழ்ச்சங்கம் ஒன்றினை மதுரையில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் உருவாக்கியதாக பதியப்பட்டுள்ளது . 1800 களின் பிற்பகுதியில் புத்தகக்கடை என்றால் அது மதுரை புதுமண்டபத்தில் தான் இருக்கும் என்பது நிலைபெற்றுள்ளது .

இவ்வரலாற்றின் தொடர்ச்சியாக 1942 ஆம் ஆண்டு புது மண்டபத்தின் மையப்பகுதியில் அருங்காட்சியகத்துடன் அமைந்த நூலகம் ஒன்று அன்றைய சென்னை மாகாண கவர்னரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது . பொதுமக்களின் பயன்பட்டிற்காக அமைக்கப்பட்ட மதுரையின் முதல் பொதுநூலகம் இதுவாக இருக்கக்கூடும் .

இந்த திறப்புவிழாவினைக் குறிக்கும் கல்வெட்டு புதுமண்டபத்தின் மையப்பகுதி நுழைவாயில் கதவினோரம் இருந்தது . கால் நூற்றாண்டுக்கு முன்பு நான் பார்த்துள்ளேன் . ஆனால் இடைபட்ட காலத்தில் அக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட அந்த தூணைக் காணவில்லை . புது மண்டபத்துக்கு போகும் போதெல்லாம் அந்த தூணைத் தேடுவது வழக்கம் .

நாடாளுமன்ற உறுப்பினரான பின் ஆய்வுப் பணிக்காக புதுமண்டபம் போன போது அதிகாரிகளிடம் இந்தக் கல்வெட்டினைப் பற்றி சொல்லி ” நுழைவாயிலில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட சிறு தூண் இருந்தது . இப்பொழுது அது இல்லை . கண்டறிய வேண்டும் ” என்று கூறினேன் . அதிகாரிகளும் முயல்கிறோம் என்றனர் .

கோவிட் ஊரடங்கு காலத்துக்குப் பின்னர் மீண்டும் ஆய்வுக்கு போனேன் . புதிய அரசு பொறுப்பேற்றபின் அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையராக திரு.செல்வதுரை பொறுப்பேற்றிருந்தார் , அவரிடம் புதுமண்டபத்தின் சிறப்பினையும் கல்வெட்டு குறித்த செய்தியையும் கூறினேன் .

” புதுமண்டபம் முழுவதும் எண்ணற்றை கடைகள் இருப்பதால் எங்களால் அப்படியொரு கல் தூண் இருக்கிறதா ? எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை ” என்று உடனிருந்த அதிகாரிகள் சொன்னார்கள் .

நான் செல்லதுரை அவர்களிடம் மதுரையின் மிகமுக்கியமான கல்வெட்டுகளில் அதுவும் ஒன்று . கண்டறியத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ” என்று சொல்லிவிட்டு வந்தேன் .

இப்பொழுது புதுமண்டபத்திலிருக்கும் கடைகள் முழுவதும் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டு விட்டது . நூறு ஆண்டுகளுக்குப் பின் புதுமண்டபம் மீண்டும் ” பழைய மண்டபமாக ” முழு அழகுடன் காட்சியளிக்கிறது .

புதுமண்டபத்தில் ஆண்டுதோறும் நடக்கும் வசந்த விழாவினை இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் நடத்த கடைகள் இருந்த பகுதி முழுவதையும் முதன்முறையாக சுத்தம் செய்துள்ளனர் .

அப்பொழுது ஏதோவோர் ஓரத்தில் தனியாக ஒரு கல்தூண் கிடந்துள்ளது . அதனைப் புரட்டிப் பார்த்தபொழுது சென்னை மாகாண கவர்னரால் அருங்காட்சியகமும் நூலகமும் திறந்து வைக்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டு என்பது தெரிய வந்துள்ளது .

அவ்விடத்தில் இருந்த திரு . செல்லதுரை அவர்கள் , “ எம் பி இந்த கல்வெட்டு குறித்துதான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் . அது கிடைத்துவிட்டது . உடனே அவருக்கு போன் செய்யுங்கள் ” என்று கூறியுள்ளார் .

துனை ஆணையர் அருணாச்சலம் அவர்கள் உடனே எனக்கு போன் செய்தார் . ” சார் , நீங்கள் நீண்ட காலமாகத் தேடிய அந்தக் கல்வெட்டு கிடைத்துவிட்டது ” என்றார் .

நூல்களின் அடையாளத்தையும் நூலகத்தின் அடையாளத்தையும் மதுரை அவ்வளவு எளிதில் தொலைத்துவிடாது .

நூற்றாண்டுக்கும் மேலாக புத்தகக் கடைகளும் நூலகமும் இருந்த புதுமண்டபத்தில் புத்தகங்கள் விட்டுச்சென்ற போடையாளமாய் இந்தக் கல்வெட்டு என்றென்றும் அங்கிருக்கும் .

இதனை மீட்டுக்கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி .”

Hits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *