Sat. Apr 20th, 2024

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பிரதமர் அவர்களே அந்தந்த துறை / நிறுவனங்கள் எப்போதோ அறிவித்து நிரப்பி இருக்க வேண்டியதை இப்போது அறிவித்துள்ளீர்கள் .

2014 இல் சொன்ன 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதியை நாங்கள் சொல்லவே இல்லை என்று உங்கள் பிரச்சாரகர்கள் மறுத்து விட்டனர் . உங்கள் உள்துறை அமைச்சர் தேர்தல் வாக்குறுதிக்கு ” ஜும்லா ” என்று புதிய பொருளை அகராதியில் சேர்த்து விட்டார் . இப்போது மீண்டும் ஒரு அறிவிப்பு . இலக்கிடப்பட்ட இந்த பணி நியமனங்கள் ( Mission Mode Recruitment ) உரிய கால இடைவெளிக்குள் நடந்து முடியட்டும் .

2014 ஐ நினைவூட்டினால் உங்கள் பிரச்சாரகர்கள் மறுப்பது போல 2021 இல் நீங்கள் அறிவித்ததை மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் . மத்திய கல்வி நிறுவனங்களுக்கான ” இலக்கிடப்பட்ட பணி நியமனங்களுக்கான ” ஓராண்டு காலக் கெடு செப்டம்பர் 2022 இல் முடிவடைகிறது . ஆனால் அது குறித்து நான் தொடர்ந்து எழுதும் கடிதங்கள் மீது உரிய நடவடிக்கைகள் இல்லை . மத்திய கல்வி நிறுவனங்களிடம் வெளிப்படைத் தன்மை இல்லை . ரோஸ்டர்களை வெளியிடுவதில்லை .

புதிய வாக்குறுதியை தற்போது தந்துள்ளீர்கள் . செவிகளுக்கு இனிமையாக உள்ளது . ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளையும் கவனியுங்கள் . இதயத்திற்கு இதமாக இருக்கும் .

அடுத்தது மிக மிக முக்கியமானது .

ஏற்கெனவே ஒன்றிய அரசுத் துறை / நிறுவனங்களின் பணி நியமனங்கள் நடந்தேறும் போது மாநில மொழிகளில் தேர்வு , தேர்வர்களுக்கு மாநில மொழி அறிவு , மாநில மட்டங்களில் தேர்வு உள்ளிட்டவற்றை அமலாக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் . தமிழ்நாட்டை சார்ந்தோரின் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதோடு தமிழ் மக்களுக்கான அலுவலக சேவைகளும் மக்கள் மொழியில் அமைவதை உறுதி செய்ய வேண்டும் .

ஆகவே அகில இந்திய தேர்வு முறைமைகள் அமலில் உள்ள இடங்களில் மாநில வரையறைக்கு உட்பட்ட காலியிடங்கள் தனித்தனியே அறிவிக்கப்பட்டு ஒரே நேரத்தில் அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் . ஓ.பி.சி , எஸ்.சி , எஸ்.டி பிரிவினருக்கான நிலுவைக் காலியிடங்கள் உள்ளிட்டு அனைத்து காலி இடங்களும் நிரப்பப்பட வேண்டும் .”

நான் முன் வைக்கிற ஆலோசனைகள் பகுதி பகுதியாக சில துறைகளில் / சில நிறுவனங்களில் அமலில் இருக்கிறது . அதில் பயன் கிட்டுவதில்லை . சில நிறுவனங்களில் இக்கோரிக்கைகளில் எதுவுமே அமலாவதில்லை . ஆனால் ஒட்டு மொத்தமாக இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முறைமை உடனடித் தேவை ஆகும் .

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *