Mon. Dec 4th, 2023

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை
“பெருமகனார் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பாஜக கைதுசெய்யக்கோரி நாடெங்கிலும் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் , ஜார்க்கண்ட் மாநிலம் , ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருவர் உயிரிழந்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது . 9 மாநிலங்களில் போராட்டம் பற்றியெரிகிறபோது நாட்டை ஆளக்கூடிய பிரதமர் மோடியும் , உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கள்ளமௌனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது .

பன்மைத்துவம் எனும் பரந்துபட்டக் கோட்பாட்டுக்குப் பெயர்போன நாட்டில் இசுலாமிய மக்களுக்கெதிராக நடத்தப்படும் அவதூறுப் பரப்புரைகளும் , மதவெறிச் செயல்பாடுகள் , கோர வன்முறைகளும் , அரசின் இனஒதுக்கல் கொள்கைகளும் இந்தியப்பெருநாட்டுக்குப் பெரும் அவமானத்தையும் , தலைகுனிவையும் ஏற்படுத்தியிருக்கின்றன . பல கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் தங்களது இறைத்தூதரெனப் போற்றிக் கொண்டாடி வரும் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்த பாஜகவின் நிர்வாகிகளைக் கைதுசெய்யக்கோரி , ஒட்டுமொத்த இசுலாமியச்சமூகமும் ஒற்றைப்பெருங்குரலெடுத்துப் போராடி வரும் நிலையில் , அவற்றிற்குச் செவி சாய்க்காது அவர்கள் மீது அடக்குமுறைகளையும் , ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிடுவது அரசப் பயங்கரவாதத்தின் உச்சமாகும் .

அரபு நாடுகளும் , இசுலாமிய நாடுகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வரும் நிலையில் , அந்நாடுகளில் வாழும் இந்திய நாட்டுக்குடிகளது இருப்பும் , வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வரும் பேராபத்து குறித்து துளியும் சிந்தித்திடாது இசுலாமிய மக்கள் மீது எதேச்சதிகாரப்போக்கை ஏவிவிடும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது .

இந்தியா என்கிற நாடு பிறப்பதற்கே முன்பிருந்தே , இந்நிலத்தில் நீடித்து நிலைத்து வாழ்ந்து வரும் இம்மண்ணின் பூர்வக்குடி மக்களை , அவர்கள் தழுவி நிற்கிற , ‘ இசுலாம் ‘ எனும் மார்க்கத்தை வைத்தே அந்நியர்கள் போல சித்தரித்து வெறுத்து ஒதுக்குவதும் , அவர்களுக்கெதிராக மதவெறியைத் தூண்டி நாடெங்கிலும் கலவரம் செய்வதும்தான் பிரதமர் மோடி உருவாக்க நினைத்த புதிய இந்தியாவா ? சொந்த நாட்டுக்குடிகளை மதத்தால் துண்டாடி , வாக்குவேட்டைக்காக நாட்டைக் கூறுபோடுவதுதான் உங்களது தேசப்பக்தியா ? இந்தியா என்கிற நாடு வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இந்நாட்டின் விடுதலைக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாத ஆர்.எஸ்.எஸ் . போன்ற சங் பரிவார் அமைப்புகள் , அளப்பெரிய பங்களிப்பைச் செய்து நாட்டுக்காக ஈகம்செய்த இசுலாம் சமூகத்தைத் தேசவிரோதிக்கூட்டமென முத்திரைக் குத்துவது மோசடித்தனமில்லையா ? கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் பெரும் மத நம்பிக்கைக்கூடமாக இருந்த பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தபோதும் , நீதிமன்றமே அவ்வழக்கில் அநீதி இழைத்தபோதும் நாட்டையே நம்பி நிற்கிற இசுலாமிய மக்களை , பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டை விற்று , இலாபமீட்டத் துடிக்கும் பாஜக பழிசுமத்தி குறைகூறுவது இழிசெயல் இல்லையா ?

8 ஆண்டுகால ஆட்சியில் சாதனையென்று சொல்ல எதுவுமின்றி , பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கக்கூடத் துணிவின்றி , உள்நாட்டுக்கலவரத்தை இசுலாமிய வெறுப்பை மட்டுமே மக்கள் மத்தியில் விதைத்து , ஏற்படுத்தி , ஆட்சியதிகாரத்தைச் சுவைக்கத் துடிப்பது பாஜக அரசு செய்திடும் அற்பத்தனமில்லையா ?

ஒன்றியத்தை ஆளும் ஆட்சியாளர் பெருமக்களே ! உளச்சான்று என ஒன்று உங்களிடமிருக்கிறதா ? பாபர் மசூதியை இடித்தீர்கள் ! அப்பாவி அப்சல் குருவைத் தூக்கிலிட்டீர்கள் ! முத்தலாக்கைக் கொண்டு வந்து மதவுரிமையில் தலையிட்டீர்கள் ! நாடெங்கிலுமுள்ள மசூதிகளைக் குறிவைத்தீர்கள் ! பாங்கு ஓதுவதையும் காற்று மாசுபாடெனக் கூறி , குற்றம் கூறினீர்கள் ! உணவுரிமையில் தலையிட்டு , மாட்டிறைச்சி உண்ணவும் கெடுபிடி செய்தீர்கள் ! இசுலாமியப்பெண்கள் , ஹிஜாப் அணிவதற்கெதிராகக் கலவரம் செய்தீர்கள் ! காஷ்மீரில் மாநிலத் தன்னுரிமையைப் பறித்து , மண்ணின் மக்களை அகதிகளாக்கினீர்கள் ! குஜராத்தில் மூவாயிரம் இசுலாமியர்களைப் படுகொலை செய்தீர்கள் ! ஹஜ் மானியத்தை ரத்துசெய்தீர்கள் ! தேசிய முகாமைச் சட்டத்தைக் கொண்டு வந்து , இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளெனக் கட்டமைத்து , கைதுசெய்தீர்கள் ! கல்லெறிந்தார்கள் எனக்கூறி கையில்லா இசுலாமியர்களின் வீட்டையும் இடித்துத் தகர்த்தீர்கள் ! குடியுரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்து அவர்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்கினீர்கள் ! இவ்வாறாக , எல்லாவற்றையும் நீங்கள் செய்துவிட்டு , எங்கள் உடன்பிறந்தார்களான இசுலாமியச்சொந்தங்களை பிரிவினைவாதிகள் என்றும் , தீவிரவாதிகள் என்றும் பழிசுமத்துகிறீர்கள் ! வெட்கமாக இல்லையா ? இசுலாமிய நாடுகளோடு நட்புறவு வேண்டும் ; அந்நாட்டுப்பொருட்களும் , பொருளாதாரமும் வேண்டும் . இசுலாமிய மக்களின் வரி வேண்டும் ; அவர்கள் செலுத்தும் வாக்கும் வேண்டும் . ஆனால் , அவர்களது உரிமையும் , உணர்வும் , வாழ்வும் வேண்டாமா ? இது நாடா ? இல்லை ! சுடுகாடா ? 70 ஆண்டுகால விடுதலை வரலாற்றில் பன்னாட்டுச்சமூகத்தின் முன்னே உலகரங்கில் இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாகக் காட்டி , சந்தி சிரிக்க வைத்ததைத் தவிர , நீங்கள் சாதித்தது என்ன நியாயமாரே ?

பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களைக் கொச்சைப்படுத்தி , இழித்துரைத்த பாஜகவின் நிர்வாகிகளை நுபுர் சர்மா , நவீன் குமார் ஜிண்டால் அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனவும் , இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த பாஜகவின் தேசியத்தலைமையானது வெளிப்படையாக மன்னிப்புகோரி , நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் .”

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *