Fri. Dec 1st, 2023

சென்னை , நேரு உள் விளையாட்டரங்கில்) நடைபெற்ற விழாவில் , மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி , தொடங்கி வைத்த நிகழ்வில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை

“தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்கும் முதல் அரசு விழா இந்த விழா !

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்தமைக்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் .

இன்று , தமிழ்நாட்டில் 5 நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கும் , ஒரு இரயில்வே திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது . 3 இரயில்வே திட்டங்களும் , பைப்லைன் திட்டம் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் , 1,152 வீடுகளின் திறப்பு விழாவும் நடைபெறுகிறது . இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமான திட்டங்கள் . தமிழ்நாடு பல்வேறு வகையிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது . கல்வி , பொருளாதாரம் , மருத்துவம் , வேளாண்மை , ஏற்றுமதி , திறன்மிகு மனித ஆற்றல் எனப் பல்வேறு வகையிலும் தமிழ்நாடு ஒரு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது . இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது .

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது .

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியானது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல . சமூகநீதி , பெண்கள் முன்னேற்றம் , சமத்துவம் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி !

நமது நாட்டின் வளர்ச்சியிலும் , ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிக முக்கியப் பங்களிப்பைத் தருகிறது என்பது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்குத் தெரியும் என்று நான் உளமார நம்புகிறேன் . சிலவற்றை எடுத்துரைக்க வேண்டுமென்றால் ,

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) மதிப்பில் , தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு !

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு !

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு !

ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு !

கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு !

தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு !

ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே .

எனவே , தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப , ஒன்றிய அரசும் திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் . அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும் !

ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பும் மகத்தானது . எடுத்துக்காட்டாக , நெடுஞ்சாலைத்துறையில் நமது நாட்டிலேயே அதிக மூலதனச் செலவை மேற்கொள்ளும் மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது . தேசிய நெடுஞ்சாலைகளுக்காக தமிழ்நாட்டில் தற்போது 44 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த நிலையில் , மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ள தொகை 18 ஆயிரத்து 218 கோடியே 91 லட்சம் ரூபாய் . எனவே , சாலைக் கட்டமைப்பை மம்படுத்துவதில் , உங்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் முனைப்பாக இருக்கிறோம் . மேலும் அதிக அளவிலான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் .

இப்படி நாம் இணைந்து நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து , இரண்டு முக்கியக் கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன் .

ஒன்று , இத்தகைய இணைத் திட்டங்களை ஒன்றிய அரசு தொடங்கும்போது தனது நிதிப்பங்கை அதிகமாக அளித்தாலும் , காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து , மாநில அரசு செலவிட வேண்டிய நிதிப் பங்கை உயர்த்தும் நிலையைப் பார்க்கிறோம் .

இரண்டாவது , ஒன்றிய மாநில அரசுகளின் பங்களிப்போடு , பயனாளிகளின் பங்கையும் முன்னிறுத்தி , பல திட்டங்கள் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படுகிறது . இதில் அந்தத் தொகையை பயனாளிகள் செலுத்த முடியாதபோது , மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிற மாநில அரசுகள்தான் பயனாளிகளின் பங்களிப்பையும் , சேர்த்து செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது . இதனால் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கிறது .

எனவே , ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் ஒன்றிய அரசின் பங்கானது , திட்டம் முடியும்வரை தொடர வேண்டும் என்றும் , பயனாளிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில் , அவர்கள் தமது பங்களிப்பை செலுத்த முடியாதபோது ஒன்றிய அரசும் , மாநில அரசும் இணைந்து அதனை சமமாக ஏற்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் .

தமிழ்நாட்டிற்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில் , மேலும் சில முக்கியமான கோரிக்கைகளைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் முன் வைக்க விரும்புகிறேன் .

  1. தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் நினைவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன் .
  1. 15-5-2022 அன்று வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய GST இழப்பீடு நிலுவைத்தொகையானது 14 ஆயிரத்து 6 கோடி ரூபாய் . இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பல்வேறு மாநிலங்களின் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கக்கூடிய நிலையில் , GST இழப்பீட்டுக் காலத்தை ஜூன் 2022 – க்குப் பின்னரும் , குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தரவேண்டும் என்றும் நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வற்புறுத்திக் கூற கடமைப்பட்டிருக்கிறேன் .

  1. பழமைக்கும் பழமையாய் , புதுமைக்கும் புதுமையாய் , உலகச் செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமைத் திறத்துடன் உயிர்ப்போடு விளங்கும் தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும் , உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் .
  2. இறுதியாக , மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( NEET ) முறையைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது . இது குறித்து சட்டம் நிறைவேற்றி , மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது . இதற்கான அனுமதியை , விரைந்து வழங்கிட மாண்புமிகு பிரதமர் அவர்களை இந்தத்தருணத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் .

இக்கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன் .

” உறவுக்குக் கை கொடுப்போம் ! உரிமைக்குக் குரல் கொடுப்போம் ! “

ஒன்றிய அரசின் சார்பில் , தமிழகத்தில் செயல்படுத்த முன்வந்த திட்டங்களுக்கும் , வரும் காலத்தில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களுக்கும் , நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் . ‘ எல்லார்க்கும் எல்லாம் ‘ என்ற இலக்கை எய்திட அனைவரும் இணைந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் . நன்றி ! வணக்கம் ! “

Hits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *