Thu. Oct 6th, 2022

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்தில் வசிக்கும் ஒன்றரை லட்ச பழங்குடியின மக்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது .

தாளவாடி வட்டத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி வேலைகள்தான் குடும்பத்திற்கு வருவாய் ஆதாரமாக உள்ளது . இந்த மக்களுக்கான மருத்துவ வசதியை வழங்குவதற்காக ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும் , 4 ஆரம்ப சுகாதார நிலையங்களும் மட்டுமே உள்ளன . ஏதேனும் விபத்து நேரிட்டால் தேவைப்படும் அவசர சிகிச்சை , வன விலங்குகளால் தாக்கப்படுவதால் தேவைப்படும் அவசர சிகிச்சை , பிரசவம் போன்ற எல்லாத் தேவைகளுக்கும் இங்குள்ள மேம்பட்ட அரசு மருத்துவமனை பயன்படுவதே இல்லை . அவசர சிகிச்சைக்கு ஒரு மருத்துவர் எந்நேரமும் இருக்கிறார் என்றாலும் முதலுதவி மட்டுமே செய்யப்படுகிறது .

முதலுதவிக்கு பின் உயிரை காத்துக்கொள்ள 100 கீ.மீ கடந்து மாவட்ட தலைநகருக்கோ , பக்கத்து மாவட்டமான கோயமுத்தூருக்கோ அல்லது கர்நாடக மாநிலத்திற்கோ செல்ல வேண்டிய சூழல் உள்ளது . குறுகலான மலைப்பாதையான திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்களால் நேரும் விபத்தால் போக்குவரத்து நிறுத்தம் என்பது பெரும்பாலான நாட்களில் ஏற்பட்டுவிடுகிறது . இந்தப் போக்குவரத்து நெரிசலில் அவசர சிகிச்சைக்காக மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கும் ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்டு போக்குவரத்து சீராகும் வரை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாத சூழல் ஏற்படுகிறது . சில நேரங்களில் ஆம்புலன்ஸிலேயே பெண்கள் பிரசவித்த சம்பவங்களும் , சில நேரங்களில் உயிரிழப்பும் கூட நேர்ந்துவிடுகிறது .

கடந்த பிப்ரவரி மாதம் தாளவாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றுக் கொண்ட அனுபல்லவி என்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டு உயிர் மீட்கப்பட்டது . அந்த சிகிச்சையினால் அவரது இருதயம் பாதிக்கப்பட்டதால் இதயத்துடிப்பை சீராக வைத்துக்கொள்ள தினமும் அதிகளவு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் . தினக்கூலி வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் என்ற சூழலில் உள்ள அந்தப் பெண்ணிற்கு தினசரி ஆகும் மாத்திரைகளின் செலவே ரூபாய் 500 தொட்டு விடுகிறது . இந்த மருந்து மாத்திரை வாங்க நிதி வசதி இல்லாததால் மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு செய்து காத்துக் கொண்டிருக்கிறார் .

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மக்களை தேடி மருத்துவம் நிகழ்வை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி , ” புதிதாக ஏற்படுத்தப்பட்ட தாளவாடி , நம்பியூர் , கொடுமுடி , மொடக்குறிச்சி ஆகிய தாலுகாக்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏற்படுத்தப்படும் . தாளவாடியில் உள்ள நோயாளிகள் சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகா மாநிலம் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது . தற்போது அங்கு 5 டாக்டர்கள் பணி செய்கின்றனர் . அவர்களில் 2 பேர் சிறப்பு நிபுணர்களாக நியமிக்கப்பட்டால் , அனைத்து வகையான சிகிச்சையும் அங்கேயே கிடைக்கும் . அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று தெரிவித்திருந்தாலும் , இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை .

தாளவாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் அறுவைசிகிச்சை உள்பட பிரசவ சிகிச்சை , வன விலங்குகளால் தாக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை போன்றவை இங்கேயே கிடைக்கும் . ஆகவே அமைச்சரின் வாக்குறுதி , மக்களின் எதிர்பார்ப்பு ஆகியவை உடனடியாக நிறைவேற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது .”

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.