Thu. Mar 28th, 2024

மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி-மாநிலச் செயலாளர் சினேகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும் .

பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை , அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் ( ஏஐசிடிஇ ) 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது . இது ஏழை , நடுத்தர மாணவர்களின் உயர்கல்விக் கனவை சிதைத்துவிடும் . எனவே , தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் .

உயர்கல்வியில் தமிழகம் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது . அதேசமயம் , அனைத்து தரப்பு மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே சமூகநீதியின் நோக்கமாகும் .

தற்போது ஏஐசிடிஇ அமைத்த , நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான தேசிய கட்டணக் குழு , தனது பரிந்துரையை சமர்பித்துள்ளது . அதில் , இளநிலைப் பொறியியல் படிப்புக்கு ரூ .79,600 முதல் ரூ .1.90 லட்சம் வரை , முதுநிலைப் பொறியியல் படிப்புக்கு ரூ .1.41 லட்சம் முதல் ரூ .3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளது .

இதேபோல , பாலிடெக்னிக் மற்றும் மேலாண்மைப் படிப்புகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன . புதிய கல்விக் கட்டணம் ஏற்கனவே இருந்ததைவிட 20 முதல் 25 சதவீதம் வரை கூடுதலாகும் .

மேலும் , மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம்காட்டி , கல்லூரிகள் கட்டணத்தை குறைக்கக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமென பலரும் வலியுறுத்தும் சூழலில் , கட்டணத்தை உயர்த்தியிருப்பது நியாயமற்றது . எனவே , தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழு , ஏஐசிடிஇ பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் .

மேலும் , பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண உயர்வை நிர்ணயிக்க மாநில அரசு குழு அமைத்துள்ள நிலையில் , இதை ஏஐசிடிஇ தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை .

கல்வியை சேவை மனப்பான்மையுடன் அணுகுமாறு அறிவுறுத்த வேண்டுமே தவிர , வியாபார நோக்கில் செயல்படத் தூண்டக் கூடாது . கல்லூரிகளின் செலவு அதிகரித்தால் , அதற்கு அரசுத் தரப்பில் மானியம் அளிப்பதே தீர்வாகும் . இதைவிடுத்து , மாணவர்களின் தலையில் மிளகாய் அரைக்கக்கூடாது .

தமிழகத்தில் 460 – க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள நிலையில் , 100 சதவீதம் நிரம்பியுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் . 20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பவில்லை . பல கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன .

இந்நிலையில் , கல்விக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே சென்றால் , பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்பமாகிவிடும் . அதுமட்டுமின்றி , மிகக் குறைவான சம்பளத்துக்கே வேலைபார்க்க வேண்டிய சூழலுக்கு பொறியாளர்கள் உள்ளாகியுள்ளனர் .

எனவே , கல்லூரிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது , தரமான கல்வி கிடைக்கச் செய்வது , வேலைவாய்ப்புக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர , கல்வி நிறுவனங்களை லாபம் சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்களாக மாற்ற உதவுவதாக இருக்கக் கூடாது .”

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *