Thu. Oct 6th, 2022

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடைபெறும் இரண்டு நாள் ( மே 16, 17) வேலை நிறுத்தத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஜவுளித் தொழில்தான். பனியன், விசைத்தறி, கைத்தறி என ஜவுளித்தொழிலை நம்பி ஒரு கோடி பேருக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். இந்த அனைத்து தொழில்களும் பஞ்சு மற்றும் நூலின் அதீத விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஜவுளி சார்ந்த தொழில்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இந்த நெருக்கடிக்கு மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம். இந்திய பருத்தி கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கட்டுப்படியான விலையில் பருத்தியை கொள்முதல் செய்து, அதனை தொழில் துறையினருக்கு சரியான விலையில் வழங்கிட வேண்டும். ஆனால், 2021 ஆம் ஆண்டில், இந்திய பருத்தி கழகத்தின் வழியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று பாஜக ஒன்றிய அரசு தடுத்துவிட்டது.

இதனால், பன்னாட்டு/உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், ஆன்லைன் ஊக வர்த்தக நிறுவனங்களும் பஞ்சை மொத்தமாக கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தினார்கள். இதுதான் தற்போது ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத விலையேற்றத்திற்கு காரணமாகும்.

2020 ஆம் ஆண்டு வரையில் ஒரு கேண்டி பஞ்சு விலை ரகங்களுக்கு ஏற்றவாறு ரூ.35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை இருந்தது. ஆனால் இப்போது ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ. 95 ஆயிரம் முதல் ரூ.1.05 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக நூல் விலையும் உயர்ந்துள்ளது.

எனவே, ஒன்றிய அரசு ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி இந்திய பருத்தி கழகம் மூலம் விவசாயிகளிடம் பருத்தியை கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து வருடம் முழுவதும் பஞ்சாலைகளுக்கு சரியான விலையில் தட்டுப்பாடு இல்லாமல் பஞ்சு கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும். செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.”

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.