ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதம் கடிதம் “” துக்ளக் ” விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்னிலையில் பேசிய இதழ் ஆசிரியர் திரு எஸ்.குருமூர்த்தி வங்கி அதிகாரிகளை , ஊழியர்களை ” கழிசடைகள் ” என்று வசை மாறி பொழிந்துள்ளார் . மிக நாகரீகமாக பொருள் கூறினால் ” உதிர்ந்த ரோமம் ” என்பதே . இலட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் மிகுந்த மனக் காயத்திற்கு ஆளாகி உள்ளார்கள் .
வங்கி அலுவலர்களோடு குருமூர்த்தியின் விமர்சனம் நிற்கவில்லை . சி.வி.சி போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளையும் தர்க்க நியதி இல்லாமல் விமர்சனம் செய்துள்ளார் . அதற்கு தீர்வாக அரசின் பங்குகளை அரசு வங்கிகளில் 51 % ல் இருந்து 49 % க்கு குறைப்பதே வழி என்றும் கூறியுள்ளார் . தனியார் நிதி நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி வரும் செய்திகளை மக்களும் அறிவார்கள் . அமலாக்க பிரிவு ஒரு பிரபல தனியார் வங்கியின் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் பற்றி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை பல கதைகளை பேசுகிறது .
உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு அவர்களின் முன்னிலையிலேயே அநாகரிகமாக பேசி இருக்கிறார் . மேலும் வங்கி ஊழியர்கள் நிதியமைச்சரின் கீழ் பணியாற்றுபவர்கள் . கோவிட் காலத்தில் அளப்பரிய பணியை பல இன்னல்களுக்கு மத்தியில் ஆற்றியுள்ளார்கள் . அதை அக்கூட்டத்தின் நிதியமைச்சரின் உரையும் அங்கீகரித்துள்ளது .
நிதி அமைச்சர் அவர்களே ! திரு குருமூர்த்தி அவர்களின் அநாகரிகமான வார்த்தைகள் வெளிப்படையாக கண்டிக்கப்பட வேண்டும் . அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் – குரு மூர்த்தி உட்பட – எந்த பகுதி தொழிலாளர்களின் கௌரவத்தையும் பாதிக்கிற வகையிலான பொறுப்பற்ற பேச்சுக்களை பொது நிகழ்ச்சிகளில் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும் .
உடனடியாக அவர் வகிக்கும் உயர் பொறுப்பின் மதிப்பையும் சீர் குலைக்கிற குருமூர்த்தியின் ” கழிசடை ” கூற்றை நிதி அமைச்சர் கண்டிப்பார் என நம்புகிறேன் .”
Hits: 2